மாயமான திருநெல்வேலி பாஜக நிர்வாகியின் கார்.. நிதி நிறுவனம் செய்த வேலை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
திருநெல்வேலி: முருகதாஸ் என்பவர் திருநெல்வேலி பாஜக மாவட்ட துணைத் தலைவராக இருக்கிறார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று கார் வாங்கினார். அந்த காருக்கு அதே நிதி நிறுவனத்துடன் காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடும் செய்தார். ஆனால் கார் காணாமல் போய்விட்டது. இதை கண்டுபிடிக்க முடியாத நிலையில், கார் நிறுவனம் நிலுவை தொகை கேட்டது. இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட நிதி நிறுவனம் ரூ.60 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருநெல்வேலி நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கார் வாங்கிய பின்னர் திடீரென அந்த கார் திருடுபோனால் அல்லது காணாமல் போனால், அந்த கார் மாயமானது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். அத்துடன் காருக்கு போடப்பட்ட காப்பீட்டை காட்டி நிலுவை தொகை செலுத்த தேவையில்லை.. அந்த நிலுவை தொகையை காப்பீடு நிறுவனம், காருக்கு கடன் தந்த குறிப்பிட்ட நிறுவனத்திற்கு தந்துவிடும் அல்லது காரை நாமே முழு பணம் தந்திருந்தால், இழப்பீட்டை நமக்கு தரும்.. இதுதான் நடைமுறை.. இந்நிலையில் பாஜக நிர்வாகி ஒருவரின் காருக்கு நிலுவை தொகை கேட்ட தனியார் நிதி நிறுவனத்திற்கு 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி ஊருடையார்புரத்தைச் சேர்ந்த முருகதாஸ் என்பவர் பாஜக மாவட்ட துணைத்தலைவராவார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு நெல்லையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று கார் வாங்கியிருக்கிறார். அந்த காருக்கு அதே நிதி நிறுவனத்துடன் காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடும் செய்தார். பின்னர் மாதந்தோறும் தவணைத்தொகை செலுத்தி வந்திருக்கிறார் முருகதாஸ்.
ஆனால் பாஜக மாவட்ட துணை தலைவர் முருகதாஸ் வாங்கிய கார் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் வைத்து காணாமல் போய்விட்டது. இது தொடர்பான போலீஸ் வழக்குப்பதிவு நகல் விவரங்களை காப்பீட்டு நிறுவனத்திடம் தாக்கல் செய்தார்கள். காரை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் காப்பீடு செய்த தொகை ரூ.2.5 லட்சத்தை தனியார் நிதி நிறுவனத்துக்கு காப்பீடு நிறுவனம் செலுத்தியிருக்கிறதாம்.
இந்த நிலையில் 7 ஆண்டுகள் கழித்து 2020-ம் ஆண்டு நிதி நிறுவனம் அறிவிப்பு அனுப்பி ரூ.7,94,642 செலுத்த வேண்டும் என்று பாஜக மாவட்ட துணை தலைவர் முருகதாஸுக்கு தெரிவித்துள்ளது. இதையடுத்து முருகதாஸ், திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி கிளாடஸ்டோன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனக சபாபதி ஆகியோர் விசாரித்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம், முருகதாஸுக்கு நஷ்டஈடாக ரூ.50 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு ரூ.10 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.60 ஆயிரம் வழங்க உத்தரவு பிறப்பித்தனர்.












Click it and Unblock the Notifications