யார் கண்ணு பட்டுச்சோ.. வில்லங்கத்தில் இருட்டுக் கடை! நான் தான் ஓனர்.. பத்திரத்தை நீட்டும் நயன் சிங்!
நெல்லை: நெல்லை இருட்டுக்கடை உரிமை யாருக்கு என்ற விவகாரத்தில் மீண்டும் புதிய பிரச்சனை எழுந்துள்ளது. இருட்டுக்கடை உரிமையாளர் என கூறப்படும் கவிதாவின் சகோதரர் நயன் சிங் சார்பில் இன்று பத்திரிகைகளில் பொது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இருட்டுக்கடையை உருவாக்கிய கிருஷ்ண சிங், அவரது மகன் பிஜிலி சிங், அவரது மனைவி சுலோச்சனா பாய்க்கு கடையின் உரிமை சென்று சேர வேண்டும் என உயில் எழுதி வைத்துள்ள நிலையில் இந்த விவகாரம் தற்போது கோர்ட்டுக்கு சென்றுள்ளது.
நெல்லை என்றாலே அல்வா தான். அல்வா என்றாலே இருட்டுக்கடை அல்வா என்பது அனைவருக்கும் தெரியும். அந்த அளவுக்கு உலகப் புகழ் பெற்றது நெல்லை இருட்டுக்கடை அல்வா கடை. இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே ஊடகங்களில் இருட்டுக்கடை அல்வா நிறுவனம் சிக்கி பேசு பொருளாகி வருகிறது.
இருட்டுக்கடையை உருவாக்கியவர் கிருஷ்ண சிங் என்பவர். இந்த நிலையில் தற்போது இருட்டுக்கடை அல்வா கடையின் நிர்வாகத்தை கவிதா - ஹரிசிங் நிர்வகித்து வருகின்றனர். இவர்களது மகள் ஸ்ரீ கனிஷ்காவுக்கும் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் மிகப் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது.

இதற்கிடையே இருட்டுக்கடை உரிமத்தை வரதட்சணையாக கேட்டு கொடுமை செய்வதாக நெல்லை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக பல்ராம் சிங் குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் 10 நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது. இதனிடையே தன்னுடைய கணவர் லண்டனுக்குச் செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க வேண்டும் என ஸ்ரீ கனிஷ்கா மேலும் ஒரு புகாரை அளித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது இருட்டுக்கடை மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறது இருட்டுக்கடை உரிமை யாருக்குச் சொந்தம் என்ற விவகாரத்தில் கடையின் உரிமையாளர் எனக் கூறப்படும் கவிதாவின் சகோதரர் நயன் சிங் என்பவர் இன்று பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்," திருநெல்வேலி டவுன், கீழ ரத வீதி கதவு எண்.14 ல் இயங்கி வரும் இருட்டு கடை ஸ்தாபனத்தை கிருஷ்ண சிங் என்பவர் ஆரம்பித்தார். மேற்படி கிருஷ்ண சிங்-க்கு பின் மேற்படி இருட்டு கடை ஸ்தாபனத்தை அவரது மகனான பிஜிலி சிங் நடத்தி வந்தார். மேற்படி பிஜிலி சிங் மனைவி பெயர் சுலோக்சனா பாய் ஆகும்.
மேற்படி பிஜிலி சிங் மற்றும் சுலோக்சனா பாய் ஆகியோர்களுக்கு யாதொரு வாரிசும் கிடையாது. சுலோக்சனா பாயின் உடன் பிறந்த சகோதரர் ஜெயராம் சிங் ஆவார். மேற்படி ஜெயராம் சிங் மகன் எனது கட்சி ஆவார். பிஜிலி சிங் உயிருடன் இருக்கும் பொழுது நல்ல உடல்நிலையில் மனநிலையில் யாருடைய தூண்டுதல் இன்றி தன் விருப்பப்படி தான் என்ன செய்கிறோம் என்று உணரக் கூடிய நிலையில் தனது இறுதி உயிலை 03.09.1999ல் எழுதி சட்டப்படி சாட்சிகள் முன்பு கையொப்பம் செய்திருக்கிறார். மேற்படி பிஜிலி சிங் 23.03.2000ல் இறந்து விட்டார். அவர் இறந்த பின்பு அவர் 03.09.1999ல் எழுதி வைத்த உயில் நடைமுறைக்கு வந்துள்ளது.
மேற்படி உயிலின் அடிப்படையில் பிஜிலி சிங்-க்கு பாத்தியப்பட்டச் சொத்துக்கள் மற்றும் இருட்டு கடை ஸ்தாபனம் ஆகியவைகள் அவரது மனைவியான சுலோக்சனா பாய்க்கு சென்றடைய வேண்டும் என்றும், மேற்படி சுலோக்சனா பாய் பிஜிலி சிங்-க்கிற்கு பாத்தியப்பட்ட சொத்துக்கள் மற்றும் இருட்டு கடை ஸ்தாபனத்தை தான் உயிருடன் இருக்கும் வரை எந்தவிதமான வில்லங்கம் விற்கிரையம் செய்யாமல் அனுபவம் மட்டும் செய்து வர வேண்டும்
மேற்படி சுலோக்சனா பாய் இறந்த பின்பு பிஜிலி சிங்-க்கிற்கு பாத்தியப்பட்ட சொத்துக்கள் மற்றும் இருட்டு கடை ஸ்தாபனம் எனது கட்சிக்கு வந்து சேர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பிஜிலி சிங் இறந்த பின்பு அவர் எழுதி வைத்த 03.09.1999 தேதியிட்ட உயில் நடைமுறைக்கு வந்து அதன் படி பிஜிலி சிங்-க்கு பாத்தியப்பட்ட சொத்துக்கள் மற்றும் இருட்டு கடை ஸ்தாபனத்தை அவரது மனைவியான சுலோக்சனா பாய் அடைந்து ஆண்டு அனுபவம் செய்து வந்தார்.
மேற்படி சுலோக்சனா பாய் 07.02.2025 ல் இறந்து விட்டார். மேற்படி சுலோக்சனா பாய் இறந்த பின்பு பிஜிலி சிங்கிற்கு பாத்தியப்பட்டச் சொத்துக்கள் மற்றும் இருட்டு கடை ஸ்தாபனம் எனது கட்சியான நயன் சிங் என்பவருக்கு பாத்தியப்பட்டதாகும். எனது கட்சியின் உடன் பிறந்த சகோதரியான கவிதா என்பவர் பிஜிலி சிங்கிற்கு பாத்தியப்பட்டச் சொத்துக்கள் மற்றும் இருட்டு கடை ஸ்தாபனம் ஆகியவை தனக்கு மட்டும் பாத்தியப்பட்டதாக கூறி வருகிறார்.
மேற்படி இருட்டு கடை ஸ்தாபனம் சம்பந்தமாக உரிமை இல்லாத சில நபர்கள் அவர்களுக்குள் சண்டை செய்து வருவதாக எனது கட்சிக்கு தெரிய வருகிறது. ஏற்கனவே கூறியப்படி பிஜிலி சிங் அவர்கள் எழுதி வைத்த 03.09.1999 தேதியிட்ட உயிலின் படி பிஜிலி சிங்கிற்கு பாத்தியப்பட்ட சொத்துக்கள் மற்றும் இருட்டு கடை ஸ்தாபனம் எனது கட்சிக்கு மட்டும் சர்வ சுதந்திரமாக பாத்தியப்பட்ட சொத்துக்கள் ஆகும். இந்த விபரம் எனது கட்சியின் சகோதரியான கவிதாவிற்கு நன்றாக தெரியும்.
எனது கட்சியின் சகோதரியான கவிதா என்பவர் வாதியாக இருந்து எனது கட்சியின் மீதும், எனது கட்சியின் தாயார் மீதும் 2வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் | திருநெல்வேலியில் அ.வ.எண்.403/2023 என்ற வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். மேற்படி வழக்கில் எனது கட்சி தாக்கல் செய்த எதிர் உரையில் பிஜிலி சிங் 03.09.1999ல் எழுதி வைத்த உயிலின் 1 விபரத்தை குறிப்பிட்டு மேற்படி உமியின் அசலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதனால் என் கட்சியின் உடன் பிறந்த சகோதரியான கவிதாவோ அவரை சார்ந்தவர்களோ யாரும் உரிமை கோர முடியாது.
இருட்டு கடை ஸ்தாபனம் சம்பந்தமாக எனது கட்சியின் சகோதரி கவிதா என்பவர் மோசடியான ஆவணங்கள் ஏதேனும் உற்பத்தி செய்திருந்தால் அது எனது கட்சியை கட்டுப்படுத்தாது. எனது கட்சி பிஜிலி சிங் எழுதி வைத்துள்ள 03.09.1999 தேதியிட்ட உயிலின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்து பிஜிலி சிங்கிற்கு பாத்தியப்பட்ட சொத்துக்கள் மற்றும் இருட்டு கடை ஸ்தாபனத்தை குறித்து நடவடிக்கை எடுக்க உள்ளார் என்பதை எனது கட்சி இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறார்.
அதனால் பிஜிலி சிங்கிற்கு பாத்தியப்பட்ட சொத்துக்களை பொறுத்தோ, இருட்டு கடை ஸ்தாபனம் சம்பந்தமாகவோ யாரும் ஏதேனும் வில்லங்கம் விற்கிரையம் பெற வேண்டாம் என்றும் அதைபோல் பிஞிலி சிங்கின் சொத்துக்கள், இருட்டு கடைஸ்தாபனம் சம்பந்தமாக எனது கட்சியின் சகோதரியான கவிதா என்பவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று எனது கட்சி இதன் மூலம் கேட்டுக் கொள்கிறார். மீறுவோர்கள் மீது எனது கட்சி சட்டப்படியான நடவடிக்கையை எடுப்பார் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறார்." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications