டெபிட் கார்டு மூலம் தங்க நகை.. திருநெல்வேலி தலைமை சர்வேயர் மாரியப்பன் அப்பட்டமாக சிக்கியது எப்படி?
திருநெல்வேலி: திருநெல்வேலி தலைமை சர்வேயர் மாரியப்பன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரது வீட்டில் நடந்த சோதனையில் டெபிட் கார்டு மூலம் லட்சக்கணக்கில் தங்க நகை வாங்கியதால் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் பல லட்சம் ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களில் விஏஓ, நில அளவையர், வருவாய் அலுவலர், நகராட்சி அதிகாரி என பலரும் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை, திருச்சி, விழுப்புரம், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், சேலம், திருப்பூர், திருநெல்வேலி, நீலகிரி என பல மாவட்டங்களில் கடந்த சில மாதங்களில் மட்டும் ஏராளமான அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கிய புகாரில் கைதாகி உள்ளனர்.

பொதுவாக அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக கையும் களவுமாக சிக்கி கைதானால், அவர்கள் எதிர்காலத்தில் நீதிமன்ற தீர்ப்பால் பதவி நீக்கப்படும் நிலைக்கு ஆளாவார்கள். அதேபோல் சிறையில் தண்டனையும் அனுபவிக்க வேண்டியதிருக்கும். பல சலுகைகள் உடனடியாக பறிபோகும்.. இப்படியான சிக்கல் இருந்தும் லஞ்சம் வாங்குவோரின் எண்ணிக்கை குறையவே இல்லை..
பட்டா பெற, வாரிசு சான்றிதழ் பெற, நிலத்தை அளந்து கொடுக்க, மின் இணைப்பு பெற, வாகனங்களின் உரிமம் பெற, பத்திரப்பதிவு செய்ய, பட்டா பெயர் மாற்றம் செய்ய, பல்வேறு அரசு சான்றிதழ்கள் பெற லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இப்படி லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்களுக்கு , லஞ்சம் கொடுக்காமல், அதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்க வேண்டும். அப்படி புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட அதிகாரியை கையும் களவுமாக பிடிக்கும் போலீசார்,நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பார்கள். லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டிற்காக ஊழியர் பணியிடை நீக்கமும் செய்யப்படுவார். எனவே லஞ்சம் கேட்பவர்களை பற்றி புகார் அளிப்பதே இதற்கு தீர்வாக உள்ளது.
இந்நிலையில் திருநெல்வேலி தலைமை சர்வேயர் மாரியப்பன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி சாந்தி நகரைச் சேர்ந்தவரான மாரியப்பன், பாளையங்கோட்டை தாலுகாவில் சர்வேயராக பணியாற்றினார். பின், துாத்துக்குடிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார். தற்போது திருநெல்வேலி தாலுகா அலுவலகத்தில் தலைமை சர்வேயராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 2013ல் மாரியப்பபன் பணிக்கு சேர்ந்தார். இவர் வருமானத்திற்கு அதிகமாக லட்சக்கணக்கில் சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தது. இதையடுத்த திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஏ.டி.எஸ்.பி., மெஸ்கலரின் எஸ்கால் தலைமையிலான போலீசார் சர்வேயர் மாரியப்பன், அவரது மனைவி கிருஷ்ண ஜெயந்தி ஆகியோர் மீது தற்போது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்தனர்.
திருநெல்வேலி சாந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் அண்மையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில் சொத்துக்கள், நகைகள் வாங்கியதற்கான ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சர்வேயர் மாரியப்பன் மீது, 64.74 லட்சம் ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாரியப்பன் தனக்கு வந்த வருமானத்தை விட 124% சொத்து சேர்த்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது. டெபிட் கார்டு மூலம் லட்சக்கணக்கில் தங்க நகை வாங்கியதால் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications