“பீப்” வார்த்தையால் திட்டிய இந்து முன்னணி பிரமுகர்.. சட்டென கொந்தளித்த இன்ஸ்பெக்டர் -என்னாச்சு?
நெல்லை: இயக்குநர் லீனா மணிமேகலையை கண்டித்து நெல்லையில் இந்து முன்னணி நடத்திய போராட்டத்தில் காவல்துறையினரை தரக்குறைவாக பேசிய நிர்வாகியிடம் காவல் ஆய்வாளர் அமைதியாக எச்சரிக்கை விடுத்த வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
பிரபல இயக்குநர் லீனா மணிமேகலை காளி என்ற ஆவணப்படத்தை இயக்கி இருக்கிறார்.
இந்த ஆவணப்படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர்தான் அண்மையில் வெளியாகி சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

சர்ச்சை போஸ்டர்
"காளி" என்ற தலைப்புடன் அதற்கு பின்னால் பெண் கடவுள் கையில் திரிசூலத்தையும் மறு கையில் சிகரெட் பிடித்திருக்கிறது. அத்துடன் LGBT சமூகத்தின் வானவில் கொடியும் அதில் காட்டப்பட்டு இருக்கிறது. இந்த போஸ்டர் வெளியானதிலிருந்தே சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ட்விட்டரில் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வலதுசாரிகள், பாஜக ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

வழக்குப்பதிவு
இந்து மதத்தை அவமதித்த லீனா மணிமேகலையை கைது செய்ய வலியுறுத்தி ஹேஷ்டேக்கை அவர்கள் டிரெண்ட் செய்தனர். சர்ச்சைக்குரிய இந்த போஸ்டர் தொடர்பாக லீனா மணிமேகலை மீது உத்தரப்பிரதேச போலீசார் 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். டெல்லி காவல்துறையும் வழக்கு பதிந்துள்ளது. ஆனால், லீனா மணிமேகலை தனது கருத்திலிருந்து பின்வாங்காமல் இருந்து வருகிறார்.

இந்து முன்னணி போராட்டம்
இந்நிலையில் திருநெல்வேலியில் இயக்குநர் லீனா மணிமேகலையை கண்டித்து இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் இந்து முன்னணியின் மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, 'காவல்துறையினரை தெம்பில்லாத, தைரியம் இல்லாத.. என்று சொல்லி "பீப்" சத்தம் போடும் அளவுக்கு கொச்சை வார்த்தைகளால் திட்டி, இதுதான் திராவிட மாடலா?' என்று கேள்வி எழுப்பினார்.

இடைமறித்த காவல் ஆய்வாளர்
அப்போது அவரது பேச்சை இடைமறித்த பேட்டை காவல் ஆய்வாளர் ஹரிஹரன், "தொந்தரவுக்கு மன்னிக்கனும். காவல்துறை என்பது தமிழ்நாடு முழுக்க ஒட்டுமொத்தமாக குறிக்கக்கூடியது. திருப்பூருக்கு தனி காவல்துறை, திருநெல்வேலிக்கு தனி காவல்துறை கிடையாது. நாங்களும் உங்களைபோல மனிதர்கள். எங்களுக்கும் உணர்சிகள் இருக்கும். எங்களுக்கு குடும்பம், குழந்தை, சொந்தம் இருக்கும். எங்களை கேவலமாக பார்ப்பார்கள். எதிரில் நின்றி கேவலமாக பேசுவதை உப்பு சப்பில்லாமல் பார்க்கிறார்களே என்று நினைப்பார்கள். தயவு செய்து நாகரீகமாகவும், பொதுமக்களுக்கு காவல்துறை மீது கண்ணியம் குறையாமலும் பேசுங்கள்." என்றார். இந்த வீடியோ தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications