நெல்லையில் பயங்கரம்.. பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை.. திமுக பிரமுகர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு
நெல்லை: நெல்லையில் நேற்று இரவில் பாஜக நிர்வாகியான ஜெகன் என்பவர் 6 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் உள்ள மூளிக்குளம் மிரல்மீண்ட நாயனார் தெருவை சேர்ந்த செல்லையா என்பவரின் மகன் ஜெகன். 34 வயதான இவர் பாஜக மாவட்ட இளைஞர் அணி செயலாளராக இருந்து வந்தார். நேற்று இரவு ஜெகன் தனது பைக்கில் பாளையங்கோட்டையில் இருந்து மூளிக்குளம் அருகே உள்ள சுடலை மாட சுவாமி கோவில் அருகே உள்ள வாய்க்கால் பாலத்தில் தனது நண்பர்களை பார்த்துள்ளார்.

நண்பர்களை பார்த்ததும் பைக்கை நிறுத்திய ஜெகன், அவர்களிடம் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது 3 பைக்குகளில் வந்த 6 பேர் திடீரென ஜெகனை சுற்றி வளைத்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் ஜெகனை சரமாரியாக வெட்டிய இந்த கும்பல் தாங்கள் வந்த பைக்கில் தப்பி ஓடியது. அரிவாளால் வெட்டப்பட்டதில் படுகாயம் அடைந்த ஜெகன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
இதனைப்பார்த்து அதிச்சியில் உறைந்த ஜெகனின் நண்பர்கள் உடனே ஜெகனை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், கொண்டு செல்லும் வழியிலேயே ஜெகன் உயிரிழந்தார். பாஜக நிர்வாகி வெட்டிக்கொல்லப்பட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட ஜெகன் மீது நெல்லை மாநகரத்தில் உள்ள காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடைபெற்று இருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் தப்பிய ஓடிய கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.
இதனிடையே, பாஜக நிர்வாகி கொலை தொடர்பாக திமுக பிரமுகர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கொலை தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லையில் இரவில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
