மோடி ரோடு ஷோக்களுக்கு பதிலடி- நெல்லையில் நாளை மாஸ் காட்டும் ராகுல்- கோவையில் ஸ்டாலினுடன் பிரசாரம்!
திருநெல்வேலி: லோக்சபா தேர்தலில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி நாளை தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். கோவையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பிரசாரம் செய்கிறார் ராகுல் காந்தி.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற உள்ளது. வாக்குப் பதிவுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் அனல் பறக்கிறது. பிரதமர் மோடி ஏற்கனவே தமிழ்நாட்டில் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகத்தில் சூறாவளி பிரசாரம் செய்கிறார்.

இதேபோல மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை தமிழ்நாட்டில் பிரசாரம் செய்கிறார். திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் தனியார் பள்ளி வளாக மைதானத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி, தென்காசி திமுக வேட்பாளர் ராணி ஶ்ரீகுமார் ஆகியோரை ஆதரித்து ராகுல் காந்தி பிரசாரம் செயய் உள்ளார். இதனையடுத்து நெல்லையில் இன்று முதல் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவையில் நாளை மாலை முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ராகுல் காந்தி ஒரே மேடையில் பிரசாரம் செய்கிறார். கோவை எல் அண்ட் டி பைபாஸ் செட்டிபாளையம் அருகே பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. கோவை திமுக வேட்பாளர் கணபதி, பொள்ளாச்சி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி உள்ளிட்டோரை ஆதரித்து இரு தலைவர்களும் பிரசாரம் செய்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை திமுக, காங்கிரஸ் தலைவர் மேற்கொண்டுள்ளனர்.
பிரதமர் மோடி நேற்றுதான் கோவை மேட்டுப்பாளையத்தில் பிரசாரம் செய்தார். அதற்கு முன்னதாக சென்னை ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்தினார். கோவையிலும் மோடி ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்தினார். பிரதமர் மோடியின் கோவை, மேட்டுப்பாளையம் நிகழ்ச்சிகளை விட ஸ்டாலின் - ராகுல் காந்தி பங்கேற்கும் பிரசார பொதுக் கூட்டம் பேசப்பட வேண்டும் என்பதில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் முழு வீச்சில் களமிறங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications