நெல்லை மாரியப்பனுக்கு 1.61 கோடி மின் கட்டணம்.. ஆடிப்போன குடும்பம்.. ஒரு மணி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே மாரியப்பன் என்ற கூலி தொழிலாளியின் வீட்டுக்கு ரூ.1 கோடியே 61 லட்சம் மின்கட்டணம் வந்திருக்கிறது. செப்டம்பர் 3ம் தேதி மின் கணக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், பில் வந்திருக்கிறது. வரும் செப்டம்பர் 23ம் தேதிக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று வந்துள்ளது. இதை பார்த்து ஆடிப்போன மாரியப்பன் மின்வாரியத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அவருக்கு மின் கட்டணம் அப்படியே அடியோடு மாறி ரூ.494 என வந்துள்ளது.
மின் கட்டணம் என்பது நம்மூரில் இப்போது மிக அதிகமாக வருகிறது. முதல் 100 யூனிட் பயன்படுத்துவோருக்கு பிரச்சனை இல்லை.. கட்டணமே வராது. அடுத்த 100 யூனிட்டிற்கு ஓரளவு தான் வரும். அதிகபட்சம் 300 யூனிட் வரை என்றால் மிக குறைவாகவே வரும். ஆனால் அதன்பிறகு 500 யூனிட் வரை அப்படியே டபுள் ஆகிவிடும். 500க்கு மேல் போனால் நினைத்தே பார்க்க முடியாது.

மாதம் ஒரு முறை மின் கட்டணம்
அவர்களுக்கு குறைந்தது 2000த்துக்கு மேல் தான் மின் கட்டணம் வரும். மின் கட்டணம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை எடுக்கப்படுவதால், மிக அதிக அளவில் வருவதாக மக்கள் ஆதங்கத்தில் உள்ளார்கள். மாதம் மாதம் மின் கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்யப்போவதாக திமுக அரசு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் எப்போது அரசு நடைமுறைக்கு கொண்டு வரும் என்பது குறித்து தகவல்கள் இல்லை.
மனித தவறுகள்
மின் கட்டணத்தை பொறுத்தவரை சிலருக்கு தவறுதலாக பல ஆயிரங்கள் கூட வரும். சிலருக்கு லட்சங்களில் கூட வரும். சிலருக்கு கோடிகளில் கூட வரும். ஆனால் இந்த தவறை முறையிட்டால், உடனே அரசு சரி செய்துவிடும். அந்த வகையில் நெல்லை தொழிலாளிக்கு நடந்தது பற்றி பார்ப்போம்.
1.61 கோடி மின் கட்டணம்
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மருதகுளம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்ற கூலி தொழிலாளியின் வீட்டில் மின்வாரிய ஊழியர்கள் கடந்த இரண்டு நாள் முன்பு மின் கணக்கீடு செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள். இந்த நிலையில் அவரது செல்போன் எண்ணிற்கு மூலைக்கரைப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் இருந்து எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதில் இருந்த மின்கட்டண தொகையை பார்த்து குடும்பத்தினர் ஆடிப்போனார்கள். அதில் ரூ.1 கோடியே 61 லட்சத்து 31 ஆயிரத்து 281 என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்தனர்.
1 மணி நேரத்தில் மாறியது
அவர்கள் மூலைக்கரைப்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் முறையிட்டார்கள். இதனை பார்த்த அவர்கள் உடனடியாக மாரியப்பன் வீட்டுக்கு மின்வாரிய ஊழியர்களை அனுப்பி மீண்டும் மின்கணக்கீடு செய்திருக்கிறார்கள், அப்போது, அவரது வீட்டிற்கு ரூ.494 மட்டுமே மின்கட்டணம் வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 1 மணி நேரத்தில் ரூ.1.61 கோடி மின்கட்டண தொகையை மாற்றி ரூ.494 என்று குறுந்தகவல் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதிகப்படியான மின் கட்டணம் வந்துள்ளது உண்மைதான் என்று விளக்கம் அளித்த மின் வாரிய அதிகாரிகள், தொழில்நுட்ப கோளாறு மற்றும் மனித தவறு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டார்கள். பணியாளர் பற்றாக்குறையால், அவுட்சோர்சிங் ஊழியர்கள் மூலம் மின் கணக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது என்றும், அப்போது ஏற்பட்ட தவறின் காரணமாக இந்த குளறுபடி நிகழ்ந்திருக்கலாம் என்றும் கூறினார்கள். மேலும் இதுபோன்ற புகார்கள் இருப்பின் மின் நுகர்வோர்கள் உடனடியாக தெரிவிக்கலாம் என்றும் அவர்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.












Click it and Unblock the Notifications