நெல்லை சம்பவம்: சக மாணவரை அரிவாளால் வெட்டிய மாணவருக்கு.. 14 நாள் நீதிமன்றக் காவல்
நெல்லை: நெல்லை பாளையங்கோட்டையில் தனியார் பள்ளியில் படித்து வரும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே நடந்த பிரச்சனையில் சக மாணவர் அரிவாளால் வெட்டப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனை தடுக்க வந்த ஆசிரியருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. காயமடைந்த மாணவரும் ஆசிரியரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரிவாளால் வெட்டிய பள்ளி மாணவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சிறுவர் சீர்திருத்த குழுமம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை, பாளையங்கோட்டையில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ரோஸ்மேரி மெட்ரிகுலேசன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் நேற்று தனது ஸ்கூல் பேக்கில் அரிவாளை வைத்துக் கொண்டு பள்ளிக்கு வந்துள்ளார். பென்சில் கொடுக்காததால் இந்த மாணவருக்கும், இன்னொரு மாணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென ஸ்கூல் பேக்கில் வைத்திருந்த அரிவாளை எடுத்து அந்த மாணவனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதில், அந்த மாணவனுக்கு தலை, கைகளில் இந்த அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதைப் பார்த்த மற்ற மாணவர்கள் அதிர்ச்சியடைந்து கூச்சலிடத் தொடங்கியுள்ளனர். இதனைத் தடுக்க முயன்ற ஆசிரியருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. சரமாரியாக இருவரையும் வெட்டிய அந்த மாணவர் அங்கிருந்து தப்பியோடி உள்ளார். இதுகுறித்து மற்ற மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அரிவாளால் வெட்டிய மாணவர் அங்கிருந்து சென்று 100 மீட்டர் தொலைவில் இருந்த காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் படுகாயமடைந்த ஆசிரியர் மற்றும் மாணவரை போலீசார் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் விசாரணையில், பள்ளியில் வைத்து அரிவாளால் வெட்டப்பட்ட மாணவர் பென்சில் கொடுக்கவில்லை என்றும், இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அந்த ஆத்திரத்தில் தான் வீட்டில் இருந்த அரிவாளை பேக்குக்குள் வைத்து கொண்டு வந்து இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து நெல்லை காவல் உதவி ஆணையர் சுரேஷ் நேரில் விசாரணை மேற்கொண்டார். பள்ளி மாணவர் அரிவாளால் வெட்டியதில், பள்ளி மாணவர் மற்றும் ஆசிரியர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
இந்நிலையில், அரிவாளால் வெட்டிய பள்ளி மாணவருக்கு ஏப்ரல் 29 ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சிறுவர் சீர்திருத்த குழுமம் உத்தரவிட்டுள்ளது. தகுதியான நபர்களை கொண்டு பள்ளி மாணவருக்கு ஆலோசனை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லையில் சமீபகாலமாக அரிவாள் கலாச்சாரம் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புத்தகப்பை கையில் இருக்கும் வயதில் அரிவாளைக் கொண்டு 8 ஆம் வகுப்பு மாணவர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நெல்லை பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவிகளின் புத்தகப் பைகளில் பள்ளி நிர்வாகத்தினர் இன்று காலை சோதனை மேற்கொண்ட பிறகே பள்ளிக்குள் மாணவர்களை அனுமதித்தனர். மாணவர்களுக்கு உரிய உளவியல் ரீதியான ஆலோசனை வழங்க வேண்டும் என்றும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications