Nellai kavin: சுஜித்தின் தாய்க்கு பறந்த சம்மன்.. ஆக. 15க்குள் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு
திருநெல்வேலி: நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட கவின் காதலியின் தம்பியான சுர்ஜித்தை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடியினர் தற்போது விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், சுஜித்தின் தாய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் சிபிசிஐடி அலுவலகத்தில் சுஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரி நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் தெற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (27). நெல்லை கே.டி.சி. நகரைச் சேர்ந்தவர் சுபாஷி. கவினும், சுபாஷினியும் பள்ளிப் பருவத்தில் இருந்தே பழகி வந்துள்ளனர். இவர்களது இந்த நட்பானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

மாதம் 1 லட்சம் சம்பளத்துடன் ஐடி ஊழியராகப் பணியாற்றி வந்த கவின் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 27 ஆம் தேதி தனது தாத்தாவை சிகிச்சைக்காக சுபாஷினி பணிபுரியும் பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த சுபாஷினியின் தம்பி சுர்ஜித், கவினை பேச வேண்டும் என்று அழைத்துச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சுர்ஜித் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு போலீஸார் அவரை கைது செய்தனர். சுர்ஜித்தின் பெற்றோர்களான தமிழ்நாடு சிறப்பு காவல் படை உதவி ஆய்வாளர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
பின்னர் சரவணன் கைது செய்யப்பட்டார். அதன் பிறகே கவின் உடலை அவரது பெற்றோர் பெற்று தகனம் செய்தனர். கவினின் கொலை வழக்கை தமிழக அரசு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது. துணை காவல் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஸ் தலைமையிலான அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுர்ஜித்தின் நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், மேலும் சில நாட்களுக்கு காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கவினின் பெற்றோரை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்து ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில், கவினை படுகொலை செய்த சுஜித்தின் தாய்க்கு சிபிசிஐடியினர் சம்மன் அனுப்பியுள்ளனர். ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் சிபிசிஐடி அலுவலகத்தில் சுஜித்தின் தாய் கிருஷ்ணகுமமாரி நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications