ரூபி மனோகரன் 89 லட்சம் தரணும்.. நெல்லை ஜெயகுமாரின் 2வது கடிதம்! நெல்லை காவல்துறை கொடுத்த விளக்கம்..!
நெல்லை: மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் எழுதிய 2வது கடிதம் குறித்து விளக்கமளித்துள்ள நெல்லை மாவட்ட காவல்துறை புகார் அளித்த கடந்த 3ம் தேதியே உவரி காவல் நிலையத்தில் ஜெயக்குமாரின் மகன், இந்த கடிதத்தையும் கொடுத்திருந்ததாக கூறியுள்ளனர்.
கேபி ஜெயக்குமார் மாயமானதாக வெளியான தகவல் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜெயக்குமாரின் உடல் எரிந்த நிலையில் உவரி அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஜெயக்குமார் : காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்தது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக நெல்லை எஸ்.பி தெரிவித்துள்ளார். தனக்கு சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி, ஏப். 30-ம் தேதியிட்ட கடிதத்தை நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபி ஜெயக்குமார் தனசிங், எஸ்.பி.க்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
மரண வாக்குமூலம்: 'மரண வாக்குமூலம்' எனக் குறிப்பிட்டு ஜெயக்குமார் எழுதியுள்ள கடிதத்தில், காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு உள்ளிட்டோர் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் எழுதிய மரண வாக்குமூலம் கடிதம் தனக்கு அனுப்பப்படவில்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் மறுத்துள்ளார்.
2வது கடிதம்: இந்நிலையில் ஜெயக்குமார் எழுதியதாக 2வது கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரனிடம் 78 லட்சம், கேவி தங்கபாலு ரூபி மனோகரனிடம் வாங்கிக் கொள்ளச் சொன்ன 11 லட்சம் என மொத்தம் 89 லட்சத்தை வழக்கு தொடர்ந்து பெற வேண்டும், சி.சி.எம் பள்ளி நிர்வாகியிடம் 30 லட்சத்தை நான்கு வருட வட்டியோடு வசூல் செய்ய வேண்டும், ஆனந்தராஜா என்பவரிடம் 46 லட்சத்திற்கு வட்டியோடு வசூல் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறை விளக்கம்: இந்நிலையில் மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய 2வது கடிதம் குறித்து நெல்லை மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளனர். அதில் தனது தந்தையை காணவில்லை என புகார் அளித்த கடந்த 3ம் தேதியே உவரி காவல் நிலையத்தில் ஜெயக்குமாரின் மகன், இந்த கடிதத்தையும் கொடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மர்ம மரணம்: மேலும், கடிதத்தில் உள்ள நபர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறோம்..விசாரணை முடியும் வரை தற்கொலையா என்பதை உறுதியாக கூற முடியாது..ஜெயக்குமாரின் மகன் கொடுத்த புகாரின் படி, காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது..சடலமாக மீட்கப்பட்டதால், மர்ம மரணம் என தற்போது வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுகிறது எனவும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications