நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்.. பக்தர்கள் ஆரவாரம்! வடம் இழுத்த சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் சேகர்பாபு
நெல்லை: பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம் இன்று நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் ஒன்றான நெல்லையப்பர் கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் டவுன் பகுதியில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் ஆணி பெருந்திருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காலை மாலை இரண்டு வேளைகளிலும் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.

திருவிழாவின் 9வது நாளில், திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. சபாநாயகர் அப்பாவு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் தேரோட்டத்தில் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட தேர், நான்கு ரத வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி, அசைந்து வலம் வருகிறது. நெல்லையப்பர் தேர் 450 டன் எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனித் தேரோட்டத்தையொட்டி கோயில் பகுதிகளில் கூடுதலாக 18 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேரோட்டத்தை முன்னிட்டு, நெல்லை டவுனில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications