சிக்கல்.. சிக்காத தடயம்.. சல்லடை போட்டும் பயனில்லை! நெல்லை ஜெயக்குமார் வழக்கில் திணறும் காவல்துறை!
நெல்லை: நெல்லையில் மர்மமான முறையில் உயிரிழந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் வழக்கில் போலீசார் தீவரமாக விசாரணை நடத்தி வந்த போதிலும், இதுவரை தடயங்கள் எதுவும் சிக்காதது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கிணற்றில் சல்லடை போட்டு தேடியும் அவரது செல்போனும் கிடைக்கவில்லை.
கடந்த மே இரண்டாம் தேதி தனது தந்தையை காணவில்லை என நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மகன்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நான்காம் தேதி அவரது சொந்த ஊரில் அவரது தோட்டத்தில் வீட்டிற்கு பின்புறம் பாதி உடல் எரிந்த நிலையில் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டார்.

தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பல்வேறு தகவல்கள் உலாவின. குறிப்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களை குற்றம் சாட்டி ஜெயக்குமார் கடிதம் எழுதியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
நெல்லை ஜெயக்குமார்: இது தொடர்பாக காவல்துறையினர் 9 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜெயக்குமாரின் கை கால்கள் இரும்பு கம்பியால் கட்டப்பட்டதோடு வயிற்றில் கடப்பாக்கல் ஒன்றும் கட்டப்பட்டிருந்தது. இதனால் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டினர். ஜெயக்குமாரின் மரணம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் அரசியல் ரீதியான கொலையா அல்லது தொழில் ரீதியாக ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா அல்லது கடன் பிரச்சனையா என பல்வேறு கோணங்களில் போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கி இருக்கின்றனர்.
கொலையா? தற்கொலையா?: அதே நேரம் உடல் மீட்கப்பட்ட விதத்தை பார்க்கும்போது அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது. பல்வேறு கோணங்களில் விசாரித்தும் எவ்வித முடிவுக்கு வர முடியாத நிலையில் ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் கொலையாளிகள் யார் என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை கிடைக்காத நிலையில் அவரது மரணத்தில் குடும்பத்தினருக்கும் தொடர்பு இருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
சிசிடிவி காட்சிகள்: 2ஆம் தேதி 10.45 மணி வரை ஜெயக்குமார் உயிரோடு நடமாடியதற்கான சிசிடிவி ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது. 10.30 மணிக்கு ஜெயக்குமார் டார்ச் லைட் ஒன்றை வாங்கி இருக்கிறார். தொடர்ந்து 10.45 மணிக்கு அவரது கார் கடந்து செல்லும் வீடியோவும் போலீசாருக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் ஜெயக்குமார் கார் வீட்டின் முன் நிறுத்தப்பட்ட நிலையில் அவர் வீட்டிற்குள் செல்லவில்லை. எனவே காரை ஜெயக்குமார் நிறுத்திவிட்டு எங்கே சென்றார்? காரை விட்டு இறங்கியதும் ஜெயக்குமாரை மர்ம நபர்கள் கடத்திச் சென்றார்களா எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
செல்போன்: மேலும் ஜெயக்குமாரின் செல்போன் தொடர்புகள் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 2000 நபர்களிடம் அவர் பேசியிருக்கிறார். மும்பையில் இருந்து அவருக்கு அதிகமான தொலைபேசிகள் வந்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இரண்டாம் தேதி புதிய எண்களில் இருந்து அவருக்கு செல்போனில் ஏதேனும் தகவல் வந்திருக்கிறதா எனவும் காவல்துறையினர் விசாரணையை தொடர்ந்து வருன்றனர்.
செல்போன் மாயம்: ஆனால் அவரது செல்போனை தற்போது வரை கண்டுபிடிக்க முடியவில்லை கிணற்றுக்குள் அவரது செல்போன் வீசப்பட்டதா என போலீசார் ஆய்வு செய்த நிலையில் சுமார் 80 ஆடி ஆழ கிணற்றில் தண்ணீரை இறைத்தும் தொடர்ந்து நீரூற்று பெருகிக்கொண்டே வருவதால் செல்போனை கண்டுபிடிக்க தாமதம் ஏற்பட்டிருக்கிறது. அந்த செல்போன் கிடைத்தாலும் அதிலிருக்கு தகவல்கள் இனியும் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.
பின்னடைவு: பல்வேறு கோணங்களில் விசாரித்தும் ஜெயக்குமார் மரண வழக்கில் இதுவரை எந்தவித தடயங்களும் அல்லது சாட்சிகளோ கிடைக்கவில்லை. மேலும் குற்றவாளிகள் யார் என்பதை கூட இதுவரை காவல் துறையினர் கண்டுபிடிக்காதது வழக்கில் பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருந்த போதும் விசாரணை தொடர்ந்து வருகிறது.. ஜெயக்குமார் மரணத்திற்கு காரணம் குறித்தும் நிச்சயம் தெரியவரும் என்கின்றனர் நெல்லை காவல் துறையினர்.












Click it and Unblock the Notifications