"இயற்கை கைவிடுவதில்லை.." 2 ஆண்டு வறட்சிக்கு பின்.. துளிர்விட்ட பனங்கொட்டைகள்! அடடே செம
திருநெல்வேலி: நெல்லையில் ஒரு கிராமத்தில் 2022இல் ஊன்றப்பட்ட பனங்கொட்டைகள் இப்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முளைத்துள்ளன.. இது தொடர்பான படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்போது பெரும்பாலான இடங்களில் முறையான மழை பெய்வதில்லை. பருவமழை காலத்தில் சில இடங்களில் மழை முற்றிலும் கூட பொய்த்து போய்விடுகிறது.

சில ஊர்களில் ஆண்டுக் கணக்கில் கூட மழை பெய்வதில்லை. இதனால் அங்கு வாழும் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். அதிலும் விவசாயம் சார்ந்த கிராமம் என்றால் இதனால் கிராம மக்களின் வாழ்வாதாரமே முழுமையாக பாதிக்கப்படுகிறது.
பனங்கொட்டைகள்: அதுபோல தான் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கோவன்குளம் என்ற பகுதியில் கடந்த 2022இல் சுத்தமாகவே மழை பெய்யவில்லை. இதனால் அந்த கிராமத்தில் கடுமையான வறட்சி அப்போது நிலவியது. விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் அந்தக் காலகட்டத்தில் பனங்கொட்டைகளை ஊன்றியுள்ளனர்.

கோவன்குளம் பகுதியை சுற்றிலும் 2022இல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனங்கொட்டைகளை விதைத்துள்ளனர். இருப்பினும், அந்த ஆண்டு மழை பெய்யாததால் அவை முளைக்கவில்லை. 2023இல் மழை பெரியளவில் மழை பெய்யாத நிலையில், அந்த பனங்கொட்டைகள் எதுவும் முளைக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சோகமடைந்தனர். சிலர் இது குறித்து மறந்தே விட்டனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு: இந்தச் சூழலில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அந்த பனங்கொட்டைகள் இப்போது முளைத்துள்ளன. தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் நிலவி வந்த பஞ்சத்தால் அவற்றில் பெரும்பாலானவை முளைக்காத நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு சுமார் 35 கொட்டைகள் முளைத்துள்ளன. இத்தனை மாதங்களுக்கு பிறகு அவை முளைத்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதை அப்பகுதி மக்கள் போட்டோவாக எடுத்து தங்கள் சமூக வளைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். அது இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், இயற்கை எப்போதும் யாரையும் கைவிடுவதில்லை என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

பனையின் சிறப்பு: இந்த பனை மரம் தமிழ்நாட்டின் மாநில மரமாகும். பொதுவாக பனைகளை யாரும் பயிரிட மாட்டார்கள். அவை இயற்கையாகவே வளரும்.. ஒரு பனை மரம் வளர்ந்து முதிர்ச்சியடைய குறைந்து 15 ஆண்டுகள் ஆகும்.. ஒரு பனை மரத்தின் சராசரி ஆயுள் என்பது மனிதனின் சராசரி வயதை காட்டிலும் அதிகமாகும். மற்ற மரங்களை போல இல்லாமல் எந்தவொரு வளைவு அல்லது கிளைகள் இல்லாமல் பனை மரம் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. பனை மரத்தில் கிளைகள் எதுவும் இருக்காது. உச்சியில் மட்டும் விசிறி போன்ற இலைகள் இருக்கும்.
எங்கே உள்ளன: இவை ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டதாக கருதப்படுகிறது. பண்டை மனித இனம் எங்கெல்லாம் சென்றதோ அங்கெல்லாம் இந்த பனை மரத்தை எடுத்துச் சென்று இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதன் காரணமாகவே பனை மரங்கள் காடுகளில் காணப்படுவதில்லை. மாறாக மனிதன் இருக்கும் இடத்திற்கு அருகிலேயே காணப்படுகிறது. இப்போது ஆப்பிரிக்கா, இந்தியா, இலங்கை, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் பனை மரங்கள் காணப்படுகிறது. இந்தியாவில் உள்ள பனை மரங்களில் கிட்டதட்ட பாதி தமிழகத்தில் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications