மோடிக்கு அதானிதான் நண்பர்.. அதனால்தான் அனைத்து துறைகளும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது! ராகுல் விமர்சனம்
திருநெல்வேலி: லோக்சபா தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்ட ராகுல் காந்தி, "நெருங்கிய நண்பர் என்பதால் அதானியிடம் அனைத்து துறைகளையும் ஒப்படைத்திருக்கிறார் மோடி" என பிரதமரை விமர்சித்திருக்கிறார்.
அதானி நிறுவனத்திடம் விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகள் ஒப்படைக்கப்பட்டிருப்பது பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இந்நிலையில் நேற்று திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள பெல் மைதானத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட ராகுல் காந்தி, அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே தொடர்பு இருப்பதாக விமர்சித்துள்ளார். நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி லோக்சபா தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு கேட்ட அவர் பேசியதாவது,

"நான் தமிழக மக்களை பெரிதும் நேசிக்கிறேன். தமிழ்நாட்டுடனான எனது உறவு அரசியல் ரீதியானது அல்ல, குடும்ப உறவு. நாட்டில் உள்ள இளைஞர்கள் 83% பேர் வேலையில்லா திண்டாட்டத்தை சந்திக்கிறார்கள். பெரும் கோடீஸ்வரர்களின் 16 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்த பிரதமர் மோடி, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய தயாராக இல்லை. தனது நெருங்கிய நண்பர் என்பதால் அதானியிடம் அனைத்து துறைகளையும் ஒப்படைத்திருக்கிறார்.
மேலும், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கித்தரப்படும். கல்விக்கொள்கை மாநில அரசுகளின் வசமே அளிக்கப்படும். வறுமையின் பிடியில் உள்ள குடும்பங்களின் பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும். அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு, நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் 50% இடஒதுக்கீடு பின்பற்றப்படும். விவசாயிகளைப்போல மீனவர்களும் முக்கியம் என்பதால் காங்கிரஸ் தரப்பில் மீனவர்களுக்கான தனி தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் கலாசாரம், மொழி உள்ளிட்டவற்றை காப்பாற்றுவதற்காக நடைபெறும் யுத்தம்" என்று கூறியுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு விமான போக்குவரத்துத்துறை, விமான நிலையங்களின் பராமரிப்பை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்தது. அதன்படி திருவனந்தபுரம், மங்களூரு, ஜெய்ப்பூர், லக்னோ, அகமதாபாத் மற்றும் கவுகாத்தி ஆகிய விமான நிலையங்களை பராமரிக்கும் பொறுப்பை அதானி நிறுவனம் கைப்பற்றியது. அதாவது விமான நிலைய பராமரிப்பில் அதானி நிறுவனத்திற்கு எந்த முன் அனுபவமும் கிடையாது. இருப்பினும் டென்டர் விடப்பட்டபோது, அதானி நிறுவனம்தான் இந்த பொறுப்பை கைப்பற்றியுள்ளது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. திருவனந்தபுரம் விமான நிலையத்தை மாநில அரசே பராமரிக்கும் என்று கேரளாவின் சிபிஎம் அரசு தற்போது வரை கூறி வருகிறது.
இப்படியாக பல்வேறு துறைகள் அதானி வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. இதற்குதான் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications