சா. ஞானதிரவியம் - திருநெல்வேலி திமுக வேட்பாளர்: 32 வருட கட்சிப்பணி வெற்றிக்கனியைத் தருமா?
நெல்லை: திருநெல்வேலி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் ஞானதிரவியம்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா, ஆவரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானதிரவியம் (54). கடந்த 1964ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி பிறந்த இவர், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். கிறிஸ்தவ நாடார் வகுப்பைச் சேர்ந்தவர்.
காற்றாலை மற்றும் பெட்ரோல் பங்க் இவரது தொழிலாகும். இவருக்கு ஹேமலதா என்ற மனைவியும், இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

1987 முதல் திமுகவில் உறுப்பினராக இருந்து வரும் ஞானதிரவியம், 1998 முதல் 2002 வரை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்துள்ளார். 2002-இல் வள்ளியூர் ஒன்றிய திமுக செயலராக நியமிக்கப்பட்டார். 2014 முதல் திமுக கிழக்கு மாவட்ட பொருளாளராகவும் இருந்து வருகிறார். இதுதவிர 2006 முதல் 2011 வரை வள்ளியூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராகவும், 2011 முதல் 2016 வரை ஒன்றியக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
அன்னை குழும நிறுவனங்களின் நிறுவனரான ஞானதிரவியத்திற்கு தென்காசி, பணகுடி, பழவூர் பகுதிகளில் காற்றாலைகள் உள்ளன. மேலும் காற்றாலை நிறுவனங்களுக்கான கட்டுமானப் பணிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.
இம்முறை திமுக சார்பில் திருநெல்வேலி தொகுதியில் களமிறங்குகிறார். கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் திமுக வேட்பாளர் தேவதாசசுந்தரத்தைத் தோற்கடித்து, அதிமுக வேட்பாளர் பிரபாகரன் வெற்றி பெற்றார்.
இதுவரை திருநெல்வேலி தொகுதியில், காங்கிரசு 5 முறையும், திமுக 2 முறையும், அதிமுக 7 முறையும், சிபிஐ 1 முறையும், சுதந்திராக் கட்சி 1 முறையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications