தந்தை இல்லை.. கூலி வேலை செய்யும் தாய்.. “படிப்பு ஒண்ணுதான்”.. மாவட்ட முதலிடம் பெற்று அசத்திய மாணவன்!
நெல்லை : தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்துவிட்ட நிலையில், தாய் கூலி வேலை செய்து படிக்க வைத்த மாணவன், பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் மாணவர்கள் 4,55,017, மாணவிகள் 4,59,303 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

இதில் திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை மொத்தம் 22,400 மாணவர்கள் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், அதில் 94.19% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்கள் 11,126 பேரும், பெண்கள் 11,274 பேரும் தேர்வு எழுதியிருந்தனர். இதில் ஆண்கள் 91.28% , பெண்கள் 91.06% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியைச் சேர்ந்த மாணிக்கவாசகம் - பண்டாரச்செல்வி தம்பதியரின் மகன் அர்ஜுன் பிரபாகர், திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள நூறாண்டுகள் பழமையான அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்தார்.
மாணவன் அர்ஜுன் பிரபாகரின் தந்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தாய் செல்வி கூலி வேலை செய்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை கவனித்து வருகிறார். தனது தாய்க்கு போதிய வருமானம் இல்லாத நிலை இருந்தாலும் மாணவன் அர்ஜுன் பிரபாகர் தன்னம்பிக்கையுடன் படிப்பை தொடர்ந்து வந்தார்.
இந்த நிலையில், மாணவனின் படிப்பிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் பள்ளி ஆசிரியர்கள் செய்து வந்துள்ளனர். தொடர்ந்து, படிப்பில் கவனம் செலுத்தி சிறப்பாகப் படித்துவந்த மாணவன் அர்ஜுன், பத்தாம் வகுப்பில் மாவட்டத்திலேயே முதலிடம் பெற்றுள்ளார்.
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளிவந்த நிலையில், 500 மதிப்பெண்களுக்கு 495 மதிப்பெண் பெற்று மாவட்டத்திலேயே முதல் மாணவனாக வந்து சாதனை படைத்துள்ளார் அர்ஜுன் பிரபாகர். தமிழில் 97, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 100, அறிவியலில் 99 மற்றும் சமூக அறிவியலில் 100 என மொத்தம் 495 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் அர்ஜுன்.
தந்தை உயிரிழந்த நிலையில், தாய் கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காக்கும் ஏழ்மையான சூழ்நிலையில் படித்து மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் அர்ஜுன் பிரபாகருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அர்ஜுன் பிரபாகரின் சாதனை, தாய்க்கு மட்டுமல்லாமல், படிப்பிற்கு உதவிய ஆசிரியர்கள், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications