ராக்கெட் ராஜா காரில் ஏறி சென்ற திசையன்விளை எஸ்.ஐ! காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை
நெல்லை: இரு கொலைகள் மற்றும் பேருந்து எரிப்பு வழக்கில் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ராக்கெட் ராஜா காரில் பயணம் செய்த திசையன்விளை சப் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
பனங்காட்டுப்படை கட்சியின் நிறுவனர் ராக்கெட் ராஜா கடந்த 19 ஆம் தேதி நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். இரு கொலை வழக்கு மற்றும் பேருந்து எரிப்பு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ராக்கெட் ராஜா தனது ஆதரவாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் வருகை தந்திருந்தார். இதனால், நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காட்சி அளித்தது.

ராக்கெட் ராஜா நீதிமன்றத்திற்கு வருவதையொட்டி துணை காவல் கண்காணிப்பாளர் நாக சங்கர் தலைமையில் ஏராளமான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். நீதிமன்றத்திற்கு தனது ஆதரவாளர்கள், வழக்கறிஞர்கள் புடைசூழ வருகை தந்தார். ராக்கெட் ராஜா வருவதை ஒட்டி நீதிமன்றம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நம்பர் பிளேட் இல்லாத காரில் ராக்கெட் ராஜா வர, நான்கு கார்களில் அவரது ஆதரவாளர்கள் வந்தனர்.
தொடர்ந்து நீதிபதி முன்பு ராக்கெட் ராஜா ஆஜர் ஆனார். அப்போது நீதிமன்றம் வருவதற்கு ஏன் இவ்வளவு கூட்டத்தோடு வருகிறீர்கள் என நீதிபதி கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது தன்னுடன் வந்திருப்பவர்கள் தனது நண்பர்கள் என ராக்கெட் ராஜா கூறியிருக்கிறார். இதனால் சற்றே கோபமடைந்த நீதிபதி 'அக்கியூஸ்டுக்கு எதுக்கு இவ்வளவு ஆரவாரம்' என கேட்டதாக கூறப்படுகிறது.
மேலும் ஓரமாக நில்லுங்கள் எனக் கூறிவிட்டு வேறு வழக்குகளை விசாரித்ததாகவும் சொல்லப்படுகிறது. நீதிமன்றத்திற்கு உள்ளேயே நீண்ட நேரம் ராக்கெட் ராஜா காத்திருந்தார். காலை 10 மணிக்கு அவர் ஆஜரான நிலையில் மதியம் ஒரு மணிக்கு மேலேயே அவர் வெளியே வந்தார். ராக்கெட் ராஜா திரும்பி சென்ற போது, அவரது காரின் முன் இருக்கையில் திசையன்விளை காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி அமர்ந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
நீதிமன்ற அலுவல் பணிக்காக வந்திருந்த எஸ்.ஐ. ராமமூர்த்தி மாநகர பாதுகாப்பு காவல் வாகனத்தில் ஏறாமல் ராக்கெட் ராஜா காரில் ஏறி சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தலங்களில் வேகமாக பரவியது. இந்த நிலையில், திசையன்விளை எஸ்.ஐ ராமமூர்த்தியை சஸ்பெண்ட் செய்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications