சாதி வெறியர்களுக்கு “செக்”.. தமிழ்நாடு போலீசின் “ஆக்ஷன்” - நெல்லையில் டிஜிபியின் “பக்கா ஸ்கெட்ச்”
திருநெல்வேலி: ஜாதிய ரீதியிலான மோதல்கள் மற்றும் கொலைகளை தடுக்க மூன்று அடுக்கு கண்காணிப்பு திட்டத்தை தொடங்கி இருப்பதாகவும், தமிழ்நாட்டில் கூலிப்படை முற்றிலும் ஒழிக்கப்பட்டு உள்ளது எனவும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு முழுவதும் 3,967 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர், தமிழ்நாடு எங்கும் கஞ்சா விற்பனை தொடர்பாக 9,207 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,635 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றார்.
திருநெல்வேலி மாவட்ட ஆயுத காவல் படையில் நகர்ப்புற பகுதிகளுக்கான புதிய ரோந்து வாகன திட்டத்தையும் ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அறையையும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து மாநகர மற்றும் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அலுவலகங்களை அவர் பார்வையிட்ட அவர், அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

ரோந்து வாகனங்கள்
அப்போது அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் நகர்ப்புற பகுதிகளில் கூடுதல் ரோந்து பணி மேற்கொள்வதற்காக 400 ரோந்து வாகனங்கள் காவல்துறை செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. அதன்படி நெல்லை சரக மற்றும் நெல்லை மாநகர பகுதிகள், நகர்ப்புற பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்கொள்ள 69 ரோந்து வாகனங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
இந்த வாகனங்கள் மூலம் செயின் பறிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றை தடுக்க மற்றும் கண்காணிக்க காவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் 23 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு எங்கும் கஞ்சா விற்பனை தொடர்பாக 9,207 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,635 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கஞ்சா விற்பனை
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4,003 நபர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. கஞ்சா விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்ட 2,384 சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. நெல்லை சரக மற்றும் நெல்லை மாநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனைக்கு எதிராக மிகப்பெரிய அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கஞ்சா நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஜாதிய ரீதியிலான மோதல்கள்
தமிழ்நாடு முழுவதும் 3,967 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார்கள். நெல்லை சரக பகுதியில் ஜாதிய ரீதியிலான மோதல்கள் மற்றும் கொலைகளை தடுக்க மூன்று அடுக்கு கண்காணிப்பு திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். முதல் அடுக்கில் காவல் நிலைய அளவில் ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள்.

மூன்று அடுக்கு கண்காணிப்பு
இரண்டாம் அடுக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்லது மாநகர காவல் ஆணையாளர்கள் தலைமையிலான கண்காணிப்பு பணி நடைபெறும். அதேபோல் மூன்றாவது அடுக்கில் சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிப்பு பணி மேற்கொள்ள இந்த திட்டத்தின் மூலம் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தலாம்
தமிழகம் முழுவதும் குற்றவாளிகளை கைது செய்ய செல்லும் போது குற்றவாளிகளால் காவல்துறையினர் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும் செல்லும்போது போலீசாரை குற்றவாளிகள் தாக்கும் சூழல் ஏற்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தவும் தயங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கூலிப்படைக்கு எதிரான நடவடிக்கைகள் தமிழ்நாடு முழுவதும் எடுக்கப்பட்டு, சிறப்பு படை உருவாக்கப்பட்டு தமிழகத்தில் கூலிப்படை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது." என்றார்.












Click it and Unblock the Notifications