"விஜய் மன்னிப்பு கேட்டே ஆகணும்".. ஒரு வார்த்தையால் போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ்.. என்ன மேட்டர்?
சென்னை: நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தவெக - காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அது நடக்கவில்லை. இப்படியான சூழலில் தான் தவெக தலைவர் விஜய் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் அமைப்பு செயலாளர் ராம்மோகன் காட்டமாக தெரிவித்துள்ளார். இதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். தவெகவும், காங்கிரஸ் கட்சியும் இந்த முறை தேர்தலில் கூட்டணி வைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அது நடக்கவில்லை. காங்கிரஸ், திமுக கூட்டணிலேயே தொடர்கிறது.

இந்நிலையில் தான் நடிகர் விஜய் இன்று பேசும்போது,'' திமுக கூட்டணியில் இருப்பவர்களே ஒருவருக்கொருவர் ஓட்டு போட்டுக்கொள்ள மாட்டார்கள் போல் இருக்கிறது. திமுக தனது கூட்டணியில் காங்கிரஸை வைத்திருந்தாலும் கூட உண்மையான காங்கிரஸ் தமிழக வெற்றி கழக பக்கம் நிற்கிறது" என்று கூறினார்.
காங்., அமைப்பு செயலாளர் அறிக்கை
விஜயின் இந்த பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளதோடு, விஜய் தவறான உள்நோக்க கருத்துகளை கூறி வருகிறார். திரைமறைவில் காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணி அமைக்க முயன்ற நிலையில் முதல் முயற்சியிலேயே நிராகரிக்கப்பட்டது. இதனால் விஜய் மன்னிப்பு கோர வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு செயலாளர் ராம் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தவறான - உள்நோக்க கருத்து
''தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், இன்று நடிகர் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள கருத்துகள் முற்றிலும் ஆதாரமற்றவை, தவறானவை மற்றும் அரசியல் உள்நோக்கத்துடன் திரித்துக் கூறப்பட்டவை என்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கம் என்பது நூற்றாண்டு பாரம்பரியமும், இந்திய சுதந்திரத்திற்காக தியாக வரலாறும் கொண்ட ஒரு ஜனநாயக இயக்கமாகும். இந்தக் கட்சியை பணம் அல்லது அதிகாரத்தின் மூலம் யாராலும் "கட்டுப்படுத்த" முடியாது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி, அதன் கொள்கைகளுக்கும், மக்களின் நலன்களுக்கும் ஏற்ப செயல்பட்டு வருகிறது.
கூட்டணியில் திரைமறைவில் தவெக முயற்சி
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைப்பதற்கு தவெக எத்தகைய திரைமறைவு முயற்சிகளை மேற்கொண்டது என்பதை அனைவரும் அறிவார்கள். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, நடிகர் விஜய்க்கு என்ன கொள்கை என்று புரியாத நிலையில் அந்த முயற்சிகள் தொடக்கத்திலேயே நிராகரிக்கப்பட்டன. தி.மு.க.வை அரசியல் எதிரியாகவும், பா.ஜ.க.வை கொள்கை எதிரியாகவும் அறிவித்த நடிகர் விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகு கொள்கை எதிரி என்று அறிவிக்கப்பட்ட பா.ஜ.க.வை எதிர்த்து எந்தவித கருத்தும் கூற துணிவற்ற நிலையில் இருந்தார்.
தவெகவோடு கூட்டணி வாய்ப்பே இல்லை
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தி.மு.க.வோடு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கொள்கை கூட்டணியாக செயல்பட்டு வருகிறது. 2019, 2021, 2024 ஆகிய அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று வருகிறது. இந்நிலையில், த.வெ.க.வோடு எந்த வகையிலும் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்புகளே இல்லை. ஆனால், காங்கிரசில் ஆள்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட த.வெ.க. விற்கு விரல் விட்டு எண்ணக் கூடிய ஒருசிலர் தான் சிக்கினார்கள். ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
அப்பட்டமான பொய்
இந்நிலையில், உண்மையான காங்கிரஸ் கட்சியினர் த.வெ.க.வுடன் இருப்பதாக கூறுவதை விட ஒரு அப்பட்டமான பொய் வேறு எதுவும் இருக்க முடியாது. இது அரசியல் உள்நோக்கம் கொண்ட விஷமத்தனமான, ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டு. எனவே, காங்கிரஸ் கட்சியை சீண்டிப் பார்க்கின்ற வேலையை த.வெ.க. தலைவர் விஜய் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி, மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தை பாதுகாத்து வருகிறது. ஆனால், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் விதமாக த.வெ.க. தலைவர் விஜய் அவதூறு கருத்துகளை வெளியிடுவது பொறுப்பற்ற செயலாகும்.
மன்னிப்பு கேளுங்க விஜய்
"உண்மையான காங்கிரஸ் வேறு எங்கோ உள்ளது" எனக் கூறுவது, காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை புண்படுத்தும் செயல் மட்டுமல்ல, அரசியல் நாகரீகத்திற்கும் எதிரானதாகும். எனவே, இத்தகைய தவறான மற்றும் ஆதாரமற்ற, அவதூறு கருத்துகளை உடனடியாக திரும்பப் பெற்று, காங்கிரஸ் கட்சியினரிடமும், பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்.'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications