திருநெல்வேலி, சிவகங்கையில் திருட போன வீட்டில் அசந்து தூங்கிய திருடர்கள்.. இறுதியில் ஒரே அசிங்கம்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே மடத்தச்சம்பாடு கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவர் டெய்லராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டிற்கு மர்ம ஆசாமி ஒருவர் மதுபோதையில் வந்துள்ளார். வீட்டின் சுற்றுச்சுவரில் ஏறிய நபர், மாடியில் ஏறி பதுங்கி உள்ளார். பின்னர் திடீரென அதீத போதையில் இருந்ததால் அங்கேயே படுத்து உறங்கிவிட்டார். அவரை எழுப்பி விசாரித்த போது, திருட வந்த இடத்தில் தூங்கி விட்டதாக கூறியிருக்கிறார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருட போன இடத்தில் அசந்து தூங்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. திருநெல்வேலி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் நடந்தசம்பவம் பற்றி பார்ப்போம்..

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே மடத்தச்சம்பாடு கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து என்பவர் டெய்லராக இருக்கிறார். சம்பவம் நடந்த அன்று இரவு தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் மர்ம ஆசாமி ஒருவர் மதுபோதையில் முத்துவின் வீட்டு சுற்றுச்சுவர் மீது ஏறியுள்ளார். பின்னர் மேற்கூரையை பிடித்தவாறு வீட்டின் மாடியில் குதித்தார்.
ஆனால் அதீத போதையில் இருந்ததால் அங்கேயே படுத்து உறங்கிவிட்டார். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த நபரின் செல்போனை அவரது நண்பர் தொடர்புகொண்டுள்ளார். அப்போது செல்போன் ஒலித்துள்ளது. ஆனாலும் அந்த ஆசாமி எழுந்திருக்கவில்லை. ஆனால் செல்போன் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த முத்து எழுந்து கதவை திறந்து பார்த்தார். அப்போது மர்மநபர் படுத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது பற்றி திசையன் விளை போலீசாருக்கு முத்து தகவல் கொடுத்தார். அவர்கள் மதுபோதையில் படுத்து உறங்கிய நபரை தட்டி எழுப்பி விசாரித்தபோது, அவர் அதே ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. திருடும் நோக்கத்தில் முத்துவின் வீட்டுக்குள் எறிக்குதித்தபோது அதீத போதையால் தூங்கிவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து முத்து போலீசில் புகார் அளிக்கவில்லை. எனவே அந்த நபரை போலீசர் எச்சரித்து அனுப்பினர். இதற்கிடையே திருட வந்த வீட்டின் சுற்றுச்சுவரில் மர்மநபர் ஏறும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி காண்போரை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலும் கோயிலில் கொள்ளை அடிக்க வந்த நிலையில் மது போதையில் அசந்து தூங்கிய நபரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே எஸ் ஆர் பட்டணம் கிராமத்தில் காலகஸ்தீஸ்வரர் ஆலயம் மற்றும் கருப்பர் ஆலயம் உள்ளது இந்த கோயிலில் இன்று பகல் மூன்று பேர் கொண்ட கும்பல் கோவிலில் இருந்த மணி விளக்கு உள்ளிட்ட பொருள்களை திருடியுள்ளனர் இரண்டு பேர் தப்பித்த நிலையில் ஒரு கொள்ளையன் மட்டும் மது போதையில் அசந்து தூங்கி உள்ளார்.
இந்நிலையில் சிசிடிவி கேமராவை பார்த்த கோவில் நிர்வாகி பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து கிராம பொதுமக்கள் விரைந்து வந்து கொள்ளையனை பிடித்து கை கால்களை கட்டி வைத்து விட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தற்போது கோவிலில் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், கல்லல் காவல்துறையினர் போதை ஆசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications