நெல்லையில் 37 சென்ட் நிலத்தை மீட்ட அரசு அதிகாரிகள்.. ரூ.5 கோடி நிலத்தில் திருநெல்வேலி தாசில்தார் செம
நெல்லை: அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்வோர் மீது வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.. அதேபோல, அரசுக்கு சொந்தமான கோயில் இடத்தை, சொந்த பயன்பாட்டுக்கு தனியார் பயன்படுத்துவோர் மீதும் அறநிலையத்துறையினர், நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், நெல்லையில் கோயிலுக்கு சொந்தமான 37 சென்ட் நிலத்தை தனியார் ஆக்கிரமித்து வைத்திருந்த நிலையில், அரசு அந்த நிலத்தை மீட்டிருக்கிறது.
அரசுக்கு சொந்தமான நிலத்தையே புறம்போக்கு நிலம் என்கிறோம்.. தரிசு நிலங்கள், ஆறு, ஓடை, வாய்க்கால், சாலை, இடுகாடு என பொதுவாக உள்ள நிலங்கள் எல்லாம் இதில் அடக்கமாகும். 5 வருடத்துக்கு மேலாக புறம்போக்கு நிலத்தை வைத்திருந்தால், உரிமை கொள்ளலாம். ஆனால், அது அந்த நிலம் அரசுக்கு தேவையில்லாததாக இருக்க வேண்டும். அதற்குரிய பட்டாக்களையும் அரசுதான் முடிவு செய்யும்.

அரசுக்கு சொந்தமான நிலம்
இவ்வாறான சட்டவிதிகள் இருந்தாலும, அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகள் நடக்கின்றன.. புறம்போக்கு நிலத்தை சொந்த பயன்பாடுகளுக்கு பயன்படுத்தி கொள்வதால், அரசு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.. முக்கியமாக, புறம்போக்கு நிலத்தில் காலி செய்ய மறுத்தால், வருவாய்த்துறையினர், சம்பந்தப்பட்ட இடத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
2 நாட்களுக்கு முன்பு சென்னை ஆவடியிலும், அரசு நிலம் மீட்கப்பட்டது. 1.68 ஏக்கர் பரப்பில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 9 வணிக கட்டிடங்களை பொக்லைன் வைத்து, அதிகாரிகள் இடித்து தள்ளியதுடன், 150 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த இடத்தையும் மீட்டிருந்தனர்.
5 கோடி மதிப்பிலான நிலம்
இந்நிலையில், தற்போது திருநெல்வேலியிலும் அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது. நெல்லை அருகே கிருஷ்ணாபுரத்தில், கிருஷ்ணேஸ்வரமுடையார், அகிலாண்டேஸ்வரி கோவில் உள்ளது. 18ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த பழமையும், சிறப்பும் வாய்ந்த கோவிலுக்கு சொந்தமான 37 சென்ட் நிலம், திருச்செந்தூர் முக்கிய சாலையையொட்டி உள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 5 கோடியாகும்.
ஆனால், இந்த நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து வந்துள்ளது.. இதையடுத்து, அந்த நிலத்தை இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.. இந்து அறநிலையத்துறை உதவி ஆணையாளர் சுப்புலட்சுமி, தாசில்தார் வள்ளிநாயகம் , ஆய்வாளர் பர்வீன் பாபி ஆகியோர் தலைமையில், இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த நிலத்தை மீட்டனர்.. பிறகு, வேறு யாரும் அதை பயன்படுத்தாதபடி, சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டது... சிவந்திபட்டி போலீசார் இதற்கான பாதுகாப்பை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கோவை ரூ.2 கோடி நிலம்
இப்படித்தான், கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவிலும், அக்கநாயக்கன்பாளையம் கிராமத்தில் 50 சென்ட் அரசுக்கு சொந்தமான நிலத்தை, சிவசாமி என்பவர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியிருந்தார்.. அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு தொடர்பாக பலமுறை தகவல் அளித்தும்கூட,அந்த இடத்தை காலி செய்ய சிவசாமி பிடிவாதம் பிடித்து வந்தார்.
பின்னர், சூலூர் வட்டாட்சியர் தனசேகரன் உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அந்த கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு அரசு நிலத்தை நிலத்தை மீட்டார்கள். அந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.2 கோடியாகும்.












Click it and Unblock the Notifications