மழை விட்டும் விடாத தூரல்.. நெல்லையில் முட்டி மோதிக் கொள்ளும் உடன்பிறப்புகள்! சீ.. இதான் பிரச்சினையே!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய மேயர் பதவி ஏற்றிருக்கிறார். ஆனால் பதவியேற்பு நிகழ்ச்சியில் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை எனவும் தொடர்ந்து அங்கு உட்கட்சி பூசல் நிலவுவதாக கூறுகின்றனர் உடன்பிறப்புகள். என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்த போது பல முக்கிய தகவல்கள் கிடைத்தன.

நெல்லை மேயராக இருந்த சரவணன் குடும்ப சூழல் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்து இருந்தார். குறிப்பாக சரவணன் மீது ஏற்கனவே நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பாக கவுன்சிலர்கள் கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

DMK Tirunelveli thangam thennarasu


தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் எழுந்து நிலையில் மாநகராட்சி கூட்டத்தை நடத்த முடியாமல் இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதனால் தங்கள் பகுதிகளில் பணிகள் முறையாக நடைபெறவில்லை என கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் தான் சரவணன் தன் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து மாநகராட்சி கூட்டம் நடத்தப்பட்டு அவர்களது ராஜினாமா ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்ததையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் நெல்லை மேயர் தேர்தல் நடத்தப்பட்டது. நெல்லை மேயர் தேர்தலில் மொத்தமுள்ள 55 வார்டுகளில் 51 வார்டு கவுன்சிலர்கள் திமுக கூட்டணிக்கு உள்ளனர். இதை அடுத்து மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் கடைசி நேரத்தில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பவுல்ராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார். மதியம் ஒரு மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ராமகிருஷ்ணன் முப்பது வாக்குகள் பெற்று மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக தலைமை உத்தரவிட்டதற்கு எதிராக பவுல்ராஜ்க்கு சில திமுக கவுன்சிலர்கள் வாக்களித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

பவுல்ராஜ் வேட்பு மனுவை திமுக கவுன்சிலர், மதிமுக கவுன்சிலரும் முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் 14 பேர் பவுல்ராஜ்க்கு வாக்களித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் நெல்லை மாநகராட்சியில் நிச்சயம் உட்கட்சி பூசல் நிலவுவதாக திமுகவினரே பேசி வந்தனர். இந்த நிலையில் இன்று நெல்லை மாநகராட்சி மேயராக ராமகிருஷ்ணன் பதவி ஏற்று கொண்டார். தொடர்ந்து வழக்கம்போல் சைக்கிளில் வந்த அவர் தனது தாயிடம் இருந்து செங்கோலை பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு வந்த பவுல்ராஜ் ”நான் மேயரானால்” என்ற ஒரு பதாகையை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில் பதவியேற்பு விழாவை நெல்லை மாநகர திமுக முக்கிய பிரமுகர்கள் புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நெல்லை மாநகர திமுக செயலாளரான சுப்பிரமணியன் மேயர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. மேலும் முன்னாள் மேயரான சரவணனும் பதவி ஏற்பு நிகழ்ச்சியை புறக்கணித்திருக்கிறார்.

இந்த நிலையில் நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியனுக்கும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப்புக்கும் இடையே இருக்கும் மோதல் தான் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் என கூறப்படுகிறது. அதாவது நெல்லை மேயர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பாளையங்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினரான அப்துல் வஹாப் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு தனது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் நெல்லை மாநகர திமுக செயலாளரான சுப்ரமணியன் அறிக்கை ஒன்றை கட்சியின் முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அதில்,”கழக அமைப்பு ரீதியாக உள்ள மாநகர கழக, பகுதி கழக, வட்ட கழக நிர்வாகிகளுக்கு முறையான தகவல்கள் மற்றும் அறிவிப்புகள் முறைப்படி மாவட்ட பொறுப்பாளர் / மாநகர செயலாளர் ஆகியோரிடம் இருந்து வருவதை மட்டும் அதிகாரபூர்வ அறிவிப்பாக எடுத்துக்கொண்டு செயல்பட தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினருக்கோ / பாராளுமன்ற உறுப்பினருக்கோ கழக அமைப்பு ரீதியாக தலையிடுவதற்கு நம் கழகத்தின் சட்ட விதிமுறை இல்லை. ஆகவே தாங்களுக்கு யாராவது அமைப்பு மற்றும் நிர்வாக ரீதியாக இடையூறு செய்தால் உடனடியாக மாவட்ட பொறுப்பாளரிடமோ / மாநகர செயலாளரிடமோ தகவல் தெரிவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஆகவே மாநகர கழக நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் மாநகர சார்பு அணிகளின் நிர்வாகிகள் மாவட்ட கழகத்திற்கும், மாநகர கழகத்திற்கும் கட்டுப்பட்டு செயல்படும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார். அந்த அறிக்கையில் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பெயரும் டேக் செய்யப்பட்டிருந்த நிலையில், சிறிது நேரத்தில் அது டெலீட் செய்யப்பட்டது.

இதனால் மழை விட்டும் தூரல் விடாத கதையாக நெல்லை மாநகர் திமுகவில் உட்கட்சி பூசல் நிலவுகிறது என்கின்றனர் திமுகவினர். இந்நிலையில் சுப்பிரமணியன் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வந்தார், பின்னால் நின்றுவிட்டு சென்று விட்டார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இதுதொடர்பாக சுப்பிரமணியன் தரப்பை தொடர்பு கொள்ள முயன்ற போது அவர் அழைப்பை எடுக்கவில்லை.

DMK Tirunelveli thangam thennarasu
DMK Tirunelveli thangam thennarasu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+