மாஞ்சோலை போறீங்களா? நெல்லை மாஞ்சோலைக்குள் லேசுல போக முடியாது.. தமிழக அரசு "கண்டிஷனல்" அனுமதி.. ஜாலி
நெல்லை: நெல்லை மாவட்டம் மாஞ்சோலைக்கு சுற்றுலா செல்ல பல்வேறு நிபந்தனைகளுடன் தமிழ்நாடு வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.. அது என்னென்ன கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் தெரியுமா?
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணைக்கு மேலே இருக்கும் பசுமையான இயற்கை அழகு பகுதிதான் மாஞ்சோலையாகும்..
இந்த மாஞ்சோலை பகுதியில் குதிரைவெட்டி, நாலுமுக்கு, அப்பர் அணை போன்றவை அமைந்திருக்கின்றன.

முற்ற ஊட்டி, மலைவாசஸ்தலங்களை போல, இந்த மாஞ்சோலைக்குள் எளிதாக யாரும் நுழைந்துவிட முடியாது.. நிறைய கட்டுப்பாடுகள் உண்டு.. விதிமுறைகள் உண்டு.,
கட்டுப்பாடுகள்: காரணம், மாஞ்சோலை வெறும் தேயிலை தோட்ட பகுதியோ, சுற்றுலா பகுதியோ கிடையாது.. புலிகள் சரணாலயம் அடங்கிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியும்கூட.
அதனால்தான், சுற்றுலா பயணிகள் தனி வாகனங்களில் வந்தாலும்கூட, அம்பாசமுத்திரத்தில் இருக்கும் வனத்துறையின் அனுமதியுடன், ஆதார் கார்டு போன்ற அடையாள அட்டைகளை காட்ட வேண்டும். மேலும், அங்கே தரப்படும் விண்ணப்ப படிவத்தையும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். விண்ணப்பத்தில், மாஞ்சோலைக்குள் நுழைவோர்கள் எத்தனை பேர்? அவர்களது விவரங்கள், வாகனங்களின் எண் போன்றவைகளை நிரப்பித்தர வேண்டும்.
ஜெராக்ஸ் : வனத்துறையினர் அனுமதி தந்த பிறகுதான், அனுமதி சீட்டு வழங்கப்படும். இந்த அனுமதி சீட்டுக்களையும் நான்கைந்து ஜெராக்ஸ் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். காரணம், மாஞ்சோலை வழியெல்லாம் நிறைய செக்போஸ்ட்கள் இருக்குமாம். அங்கெல்லாம் இந்த ஜெராக்ஸ் காப்பியை காட்ட வேண்டியிருக்கும்.
இதையெல்லாம் திடுதிப்பென்று மாஞ்சோலைக்குள் நுழைந்து செய்ய முடியாது. டூர் வருவதற்கு 2, 3 நாள் முன்னாடியே இவைகளை தயார் செய்து கொள்ள வேண்டும். இவ்வளவும் பகலில் சுற்றிப்பார்க்க மட்டும்தான்,. இதுவே மாஞ்சோலையிலேயே நைட் தங்க வேண்டுமானால், அதற்கு வேறுவிதமான விதிமுறைகள் உள்ளன.
விதிமுறைகள்: வனவிலங்குகளின் நடமாட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமாக மாஞ்சோலைக்கு சுற்றுலா செல்ல தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது, சுற்றுலா செல்ல பல்வேறு நிபந்தனைகளுடன் தமிழ்நாடு வனத்துறை தற்போது அனுமதி வழங்கியுள்ளது. அந்த விவரங்கள் இவைகள்தான்:
"நேரடியாக அம்பாசமுத்திரம் துணை இயக்குனர் அலுவலகத்திற்கு சென்று அனுமதி பெற வேண்டிய தேவை இல்லை. மணிமுத்தாறு வனச்சோதனை சாவடிக்கு நேரில் சென்று வனக்காப்பாளரிடமே அனுமதி பெற்று செல்லலாம்.
வாகனங்கள்: ஒரு நாளைக்கு 10 நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். இருசக்கர வாகனம், திறந்தவெளி வாகனம், போன்ற வாகனங்களில் பயணிப்பதற்கு அனுமதி இல்லை. முன்னுரிமை அடிப்படையில் முதலில் வரும் 10 வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். காலை 8 மணிக்கு உள்ளே சென்று மாலை 5 மணிக்குள் மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியை கடந்து விட வேண்டும். தவறும் பட்சத்தில் வனவிதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
காக்காச்சி புல் வெளிப்பகுதி வரை மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் பயணத்தின் போது தடை செய்யப்பட்ட எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள், மதுபானங்கள் மற்றும் பாலித்தீன் பைகள் போன்றவற்றை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.
ஆதார் நகல்கள்: மணிமுத்தாறு வனச்சோதனை சாவடிக்கு நேரில் சென்று அனுமதி பெறும் பட்சத்தில், செல்லும் வாகனத்தின் பதிவு சான்று நகல், வாகன காப்பீடு நகல், ஆதார் நகல் இவைகளை சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும்.
வாகனத்தில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கையை பொறுத்து நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ள வனத்துறை, மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியில் அனுமதி பெற்று, நுழைவு கட்டணம் செலுத்தி, ரசீது பெற்று பின் செல்ல வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications