சட்டென மாறிய திருநெல்வேலி அதிசய கிணறு.. மீண்டும் நடந்த ஆச்சர்யம்.. பொதுமக்கள் மகிழ்ச்சி
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளத்தில் உள்ள அதிசயக் கிணறு மீண்டும் தண்ணீரை உள்வாங்க தொடங்கி உள்ளதால், அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளத்திலுள்ள இந்த அதிசயக் கிணறு வெள்ளக் காலங்களில் பெருமளவுக்கு தண்ணீரை உள்வாங்கும். இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மிகப்பெரிய அளவில் உயரும். கடந்த ஆண்டு பருவ மழைக் காலங்களில் உபரி நீர் விநாடிக்கு 3,000 கன அடி இந்த கிணற்றுக்குள் சென்றது. பல நாட்களாக தண்ணீரை உள்வாங்கியும், அதிசயக் கிணறு நிரம்பவே இல்லை. இது அந்த பகுதி மக்களுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

இது தொடர்பாக அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்த போது அதிசய கிணற்றின் அடியில் சுண்ணாம்பு பாறைகள் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் பரவி இருந்தது தெரியவந்தது. இதன் காரணமாகவே இந்த கிணறு நிரம்பவில்லை என்பதும் தெரியவந்தது. இந்த கிணறு வழியாக செல்லும் நீர் 50 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள பகுதிகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர காரணமாக இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து வெள்ளநீர் கால்வாயில் இருந்து அதிசய கிணறு வரையிலும் இருபுறமும் தடுப்புச்சுவருடன் கால்வாய் அமைக்கும் வகையில் கான்கிரீட் பலகைகள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் கிணற்றை ஒட்டி கட்டுமான பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த வாரம் கொட்டித்தீர்த்த வரலாறு காணாத மழையால் தாமிரபரணி ஆற்றின் இருகரைகளையும் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாமிரபரணி- நம்பியாறு- பச்சையாறு- கருமேனியாறு இணைக்கும் வகையில் வெள்ளநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நிறைவுபெறும் நிலையில் இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்பை அருகே வெள்ளாங்குளி கன்னடியன் கால்வாயில் இருந்து வெள்ளநீர் கால்வாயில் வெள்ளோட்டமாக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் அதிசய கிணறுக்கு ஆர்ப்பரித்து சென்றது.பெருவெள்ளமாக அதிசய கிணறுக்கு தண்ணீர் சென்றதால், கான்கிரீட் பலகைகள், கட்டைகள் போன்றவற்றையும் அடித்தது. மேலும் அதிசய கிணற்றின் 3 பக்க தடுப்புச்சுவர்களும் வெள்ளத்தில் இடிந்து விழுந்தால், கிணற்றுக்குள் கட்டுமான பொருட்களும், கட்டிட இடிபாடுகளும் குவிந்ததால் தண்ணீரை உள்வாங்காமல் நின்றது.
வெள்ளம் சற்று தணிந்த நிலையில் அதிசய கிணற்றில் தண்ணீர் மெதுவாக உள்வாங்க தொடங்கியது. இதைபார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சில விவசாயிகள் கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி, அங்கு கிடந்த கட்டுமான பொருட்களையும், இடிபாடுகளையும் அப்புறப்படுத்தினர். இதனால் கடந்த நான்கைந்து நாட்களாக, தண்ணீர் மீண்டும் வேகமாக கிணற்றுக்குள் உள்வாங்குகிறது. கிணறு நிரம்பினால் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு தீரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications