விஜய்க்கு கூடிய கூட்டம்.. வாயை பிளந்த கட்சிகள்.. ரியாலிட்டி என்ன? விசாரித்த ஸ்டாலின்! பின்னணி
திருநெல்வேலி: நெல்லை மற்றும் தூத்துக்குடியில் நடிகர் விஜய்க்கு திரண்ட கூட்டம் தமிழக அரசியல் கட்சிகளை திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பாக அதன் தலைவர் விஜய் திருநெல்வேலியில் பிரச்சாரம் செய்கையில், திமுக கையில் முழு பவரும் இருந்திருந்தால் இந்த நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடந்திருக்காது. ஸ்டாலின் சார் அதிகாரம் இல்லாத முதல்வராக இருப்பதால் இந்த நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இப்போது அவரிடம் முழு அதிகாரம் இருந்தால் எனக்கு அனுமதி கொடுத்திருக்க மாட்டார்கள்.

என் நெஞ்சில் குடியிருக்கும் திருநெல்வேலி மக்களுக்கு வணக்கம் எனக்கூறி தவெக தலைவர் விஜய் பேச்சை தொடங்கினார்; உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் நண்பன் உங்களைத்தேடி வந்திருக்கிறேன்; அதிகாரமில்லாத முதல்வராக ஸ்டாலின் இருப்பதால் நெல்லையில் நிகழ்ச்சி நடத்த முடிந்திருக்கிறது.
உங்களுக்காக நான் வந்துவிடக் கூடாது என்பதே திமுக, பாஜகவின் நோக்கம். மீண்டும் திமுக ஆட்சிக்கு வர முடியாத சூழலை மக்கள் ஏற்படுத்திவிட்டார்கள். திமுகவின் தேர்தல் கணக்குகளை மக்கள் புதைத்துவிட்டார்கள். உண்மையான காங்கிரஸ் கட்சி தவெக பக்கம் நிற்கிறது.
கரூர் விவகாரம் தொடர்பாக என் மீதி பழியை போட்டார்கள். என்னை முடக்க பார்த்தார்கள். நான் முடங்கவில்லை. நான் வீட்டில் உட்காரவில்லை. மக்கள் இப்போதும் என்னுடன் இருக்கிறார்கள். இதை பார்த்து அவர்களுக்கு ஷாக். என்னடா மக்கள் இப்போதும் இவருடன் இருக்கிறார் என்று அவர்களுக்கு கோபம்.
சரி இவரை எப்படியாவது முடக்க வேண்டும் என்று ஜனநாயகன் படத்தை முடக்கினார்கள், அது யார் என்று சொல்ல மாட்டேன். என் படத்தை முடக்கினால் நான் முடங்கிவிடுவேன் என்று நினைத்தார்கள். ஆனால் நான் முடங்கவில்லை. வலிமையாக இருக்கிறேன். இதை பார்த்து ஷாக் ஆனவர்கள் என்னை முடக்க வேண்டும் என்று எஸ்ஓபி கொண்டு வந்தனர்.
என்னை மட்டும் முடக்க வேண்டும் என்று எஸ்ஓபி கொண்டு வந்தனர். நான் செயல்படக்கூடாது என்று எஸ்ஓபி கொண்டு வந்தனர். அதை எல்லாம் மீறி நான் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறேன். இந்த எஸ்ஓபி எண்ணி முடக்காது, என்று கூறினார்.
விஜய்க்கு கூடிய கூட்டம்
இப்படிப்பட்ட நிலையில்தான் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் நடிகர் விஜய்க்கு திரண்ட கூட்டம் தமிழக அரசியல் கட்சிகளை திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலினும் அதனை உற்று கவனித்திருக்கிறார். திமுகவுக்காக வியூகம் வகுப்பவர்களிடமும், திமுக ஆதரவு அரசியல் விமர்சகர்களிடமும் தனித்தனியாக விசாரித்திருக்கிறார் ஸ்டாலின்.
அப்போது அவர்கள், ''வெறும் சினிமா கவர்ச்சி மாயைகளில் விழுகிற விட்டில் பூச்சிகள். இதற்கு ஆயுசு 1 நாள் தான். அதனால் பெரிதாக இதனை எடுத்துக்கொள்ள வேண்டாம். தன்னெழுச்சியாக கூடும் கூட்டம் என எடுத்துக்கொண்டாலும், இதே கூட்டம் தான் மற்ற மாவட்டங்களுக்கும் செல்கிறது. ஒரு இடத்தில் அந்த நபரை (விஜய்) பார்க்க முடியாதவர்கள், மற்றொரு இடத்துக்கு அவர் வரும் போது இந்த முறையாவது பார்த்துவிட வேண்டும் என்கிற உந்துதலில் கூடுகிற கூட்டம்.
ஓவரால் 2 லட்சம் பேர் வருகிறார்கள் எனில் அதே 2 லட்சம் பேர் தான் அப்படியே மற்ற இடங்களுக்கும் இடப் பெயர்ச்சி ஆகிறது. அவரை பார்க்க வருகிற கூட்டம், அந்தந்த தொகுதிகளில் இருப்பவர்கள் அல்ல ! அதனால், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என நமபத் தேவையில்லை'' என்று சொல்லியிருக்கிறார்கள்.
அரசியல் விமர்சகர்களும் தேர்தல் வியூக வகுப்பாளர்களும் விவரித்ததில் ஸ்டாலினுக்கு நம்பிக்கை இருந்தாலும், தென்மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் மற்றும் மா.செ.க்களிடமும் விசாரித்திருக்கிறார் ஸ்டாலின்.
அதற்கு,''தென்மாவட்டங்களில் 90 சதவீத தொகுதிகளில் நமக்கு சாதகமாகத் தான் இருக்கிறது தலைவரே. ஒரு முறைக்கு பல முறை அலசிட்டோம். நாம் ஜெயிப்பதில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும், ஒவ்வொரு பகுதியாக கவனமுடனும் கவனித்தபடிதான் இருக்கிறோம். தொகுதியில் தவெக ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எத்தனை பேர் என லிஸ்ட் எடுத்து வருகிறோம். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எந்த தப்பும் நடக்காது' என்று ஸ்டாலினிடம் உறுதி கொடுத்திருக்கிறார்கள்.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications