மாஞ்சோலை தொழிலாளர்கள் வீடுகளை காலி செய்ய காலக்கெடு.. பிபிடிசி நிறுவனம் என்ன சொல்கிறது?
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீடுகளை காலி செய்ய சொல்லி நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்ந விவகாரத்தில் பிபிடிசி நிறுவனம் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.
'
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அற்புதமான வனப்பகுதி மாஞ்சோலை. சுமார் 95 ஆண்டுகளுக்கு முன்பு மணிமுத்தாறு, காரையாறு மற்றும் பாபநாசம் அணைப்பகுதிகளுக்கு மேல் அமைந்திருக்கும் வனப்பகுதியில் 3350 முதல் 4920 அடி வரையிலான உயரத்தில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து மற்றும் குதிரைவெட்டி ஆகிய இடங்களை 1919ஆம் ஆண்டு முதல் 2028ஆம் ஆண்டு வரை, சிங்கம்பட்டி ஜமீனிடமிருந்து பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் என்ற தனியார் நிறிவனம் (BBTC) 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற்றிருந்தது.

அந்த இடத்தில் பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன் நிறுவனம் தேயிலை, காபி, ஏலக்காய், கொய்னா, மிளகு போன்றவற்றைப் பயிரிட ஆரம்பித்தது. எஸ்டேட் பணிகளுக்காகத் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 'கங்காணிகள்' எனப்படும் தரகர்கள் மூலமாக கூலி வேலைக்கு ஆட்கள் அழைத்து வந்து ஈடுபடுத்தி வந்தது. அப்படி அழைத்து வரப்பட்டவர்களின் வாரிசுகள் பலர் நான்கு தலைமுறைகளாக அங்கேயே வசித்து, அங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் தற்போது வரையிலும் கூலி வேலை செய்து வருகிறார்கள்.
சுதந்திர்த்திற்கு பின்னர் ஜாமீன் வசம் இருந்த இரயத்துவாரி நிலங்கள் அரசுடைமையாக்கப்பட்ட பிறகு, அரசு கட்டுப்பாட்டில் வந்தன. ஆனால் பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன் நிறுவனம் அரசுடன் ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு தேயிலைத் தோட்டத்தை 99 வருட ஒப்பந்தப்படி நடத்தி வந்த நிலையில், தற்போது குத்தகை காலம் முடிவுக்கு வரும் முன்பே, அந்த நிறுவனம் வெளியேற போகிறது.
இந்த குத்தகை காலம் முடிவதற்கு இன்னும் 4 ஆண்டுகளே உள்ள நிலையில், மாஞ்சோலை பகுதியை வனத்துறை காப்புக்காடாக அறிவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, மாஞ்சோலை பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வனத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது
அதன் ஒரு பகுதியாக, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை மலையிலிருந்து காலி செய்து, கீழே அனுப்பும் பணிகளை பிபிடிசி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தொழிலாளர்களுக்கு பிபிடிசி நிர்வாகம் விருப்ப ஓய்வு வழங்கி வருகிறது. இதற்கான நோட்டீஸ் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிப்பின் படி, "மாஞ்சோலை, மணிமுத்தாறு மற்றும் ஊத்து தேயிலை தோட்டம் மற்றும் தேயிலை தொழிற்சாலைகளை உள்ளடக்கிய சிங்கம்பட்டி குரூப்பில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் குரூப்பின் வணிகத்தை நிலைதிருத்தமான முறையில் மேலாண்மை செய்வதற்கு உதவ பி.பி.டி.சி. லிமிடெட் வெளிப்படுத்தும் விருப்ப பணி ஓய்வு திட்டம் (வி.ஆர்.எஸ்.) மூலம் தொழிலாளர்கள் தங்களது தகுதியின் அடிப்படையில் பலன்களை பெற்றுக் கொள்ளும் வகையில் அதனை தேர்வு செய்து கொள்ளலாம்.
என்ன பணப்பலன்கள்: தொழிலாளர்களுக்கு நிறுவனமானது சட்டப்படியாக வழங்கப்பட வேண்டிய பலன்கள் மட்டுமல்லாது அதனோடு சேர்த்து கருணைத் தொகையும் மற்றும் 2023-2024-ம் நிதி ஆண்டிற்கான சட்டப்படியிலான போனஸ் தொகையும் (மிகை ஊதியம்) இணைத்து வழங்கப்படும். விருப்ப பணி ஓய்விற்கான அனைத்து வழிமுறைகளும் தீர்வு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டு, விருப்ப ஓய்வு பெற விண்ணப்பிக்கும் அனைத்து தொழிலாளர்களும் அதில் கையொப்பமிட வேண்டும். தகுதி வரிகளின் அடிப்படையில் அதற்கான தலைப்பின்படி வழங்கப்படும் பணப்பலன்கள் பற்றிய விவரங்கள் விருப்ப ஓய்விற்கான திட்டத்தில் தெளிவாக கோடிட்டு காண்பிக்கப்பட்டு விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவரவர்கள் பெறுகின்ற பணப்பலன்களின் உண்மையான தொகையினை உறுதி செய்யும் வகையில் தனித்தனியாக கடிதங்கள் கொடுக்கப்படும்.

மேலும் தீர்வு ஒப்பந்தத்தின் நகலும் மற்றும் விருப்ப ஓய்வு பெறுவதற்கான விண்ணப்ப படிவமும் மாஞ்சோலை, மணிமுத்தாறு மற்றும் ஊத்து எஸ்டேட் அலுவலகத்திலும், தேயிலை தொழிற்சாலை அலுவலகத்திலும் தொழிலாளர்களின் பார்வைக்காக வருகிற 14-ந் தேதி வரை வைக்கப்படும். தொழிலாளர்கள் தங்களது விருப்ப ஓய்விற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க அன்றே கடைசி நாள்" இவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
அதேநேரம், சுமார் 100 ஆண்டுகளாக மாஞ்சோலையில் வசித்து வந்த தொழிலாளர்கள் தேயிலைத் தோட்டத்தை விட்டு பிரிய மனமில்லாமல் இடத்தை காலி செய்ய தயங்கி வருகிறார்கள். பல ஆண்டுகளாக தேயிலைத் தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்த இம்மக்கள், தாங்கள் வனத்தைவிட்டு வெளியேறி மற்ற வேலைகள் செய்ய முடியாது என கவலையில் உள்ளனர்.
மேலும், அரசு தேயிலைத் தோட்டத்தை பொறுப்பேற்ற ஏற்று நடத்த வேண்டும் என்பது தொழிலாளர்களின் தொடர் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.. இந்நிலையில், மாஞ்சோலை பகுதியில் தங்கியுள்ள தொழிலாளர்களுக்கு ஆதரவாக, அரசியல் கட்சியினரும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, பிபிடிசி நிறுவனம் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்ற முயற்சிப்பதாகவும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காலி செய்யாவிட்டால் தொழிலாளர்களின் வீடுகளுக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகளை துண்டிப்பதாக மிரட்டுவதாகவும் புகார்கள் எழுந்தள்ளது.
இதனிடையே பிபிடிசி நிறுவனம் புதிய நோட்டீஸ் வழங்கி உள்ளது. அதில், 45 நாட்களுக்குள் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது . அந்த நோட்டீசில், "நீங்கள் விருப்ப பணி ஓய்வு வேண்டி, தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (BBTC Ltd) பணிகளிலிருந்து விடுவிக்க கோரியும், தீர்வு ஒப்பந்தம் மற்றும் விருப்ப பணி ஓய்வு திட்டத்தின் படியிலான முன் முதிர்ந்த பணி ஓய்வு பலன்கள் கேட்டும் விண்ணப்பித்துள்ளீர்கள்.
நீங்கள் தாமாகவே முன் வந்து உங்களுக்கு கிடைக்கப் பெற்ற செய்திகள் மற்றும் விசாரணைகளின்படி, ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஒப்புதல் அளித்துள்ளதோடு, மேற்படி தீர்வு ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் குறித்து நீங்களோ அல்லது உங்களது ஆலோசகர்களோ, உங்கள் பிரதிநிதிகளோ அல்லது வழக்கறிஞர்களோ எந்த ஒரு மறுப்புரைகளும் இனி வருங்காலங்களில் எழுப்ப வழிமுறைகள் இல்லை என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளீர்கள்.
மேலும், உங்களது குடும்ப உறுப்பினர்களுடன் குடியிருப்புக்காக மாஞ்சோலை எஸ்டேட்டில் கொடுக்கப்பட்ட குடியிருப்பை, நீங்கள் காலி செய்து, இறுதி நாளிலிருந்து 45 நாட்களுக்குள் பிபிடிசி லிமிடெட் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். உங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மீதமுள்ள கருணைத் தொகையானது வழங்கப்படும்" இவ்வாறு நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications