கே.எஸ்.அழகிரிக்கு சொந்தக் கட்சியில் வந்த சோதனை! நெல்லையில் கருப்புக்கொடி காட்டி மகளிரணி எதிர்ப்பு!
நெல்லை: நெல்லை மாவட்டத்திற்கு சென்ற தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு, சொந்தக் கட்சியை சேர்ந்தவர்களே கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் திசையன்விளையில் நேற்று நடைபெற்றது. இதில் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதனிடையே அழகிரியின் நெல்லை வருகைக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலரே கடும் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டி பரபரப்பை ஏற்பட்த்தினர். அதுமட்டுமல்லாமல் மகளிரணி நிர்வாகிகள் கருப்பு சேலை அணிந்து அழகிரியை நெல்லைக்குள் வரவிட மாட்டோம் என ஆவேசம் காட்டினர்.

இதற்கு காரணம் திசையன்விளையில் நடைபெற்ற நெல்லை மாவட்ட காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்துக்கு நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனுக்கு அழகிரி தரப்பில் அழைப்பு விடுக்காததே எனத் தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல நாங்குநேரி வட்டாரத்தில் ரூபி மனோகரன் நியமித்த காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரையும் ஓராண்டுக்கு முன்னர் கே.எஸ்.அழகிரி மாற்றியதும் இந்த கோபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.
அதேபோல் சில மாதங்களுக்கு முன்னர் சத்தியமூர்த்தி பவனில் வைத்து கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்களுக்கும், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே அடிதடி நிகழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனால் தான் சமயம் பார்த்து கே.எஸ்.அழகிரியின் இமேஜை டேமேஜ் ஆக்கியிருக்கிறார்கள் ரூபி மனோகரன் ஆதரவாளர்கள். காங்கிரஸ் கட்சியையும் கோஷ்டிப்பூசலையும் பிரிக்கவே முடியாது என்பதற்கு இது போன்ற நிகழ்வு ஒரு உதாரணமாகும்.
ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் பிரச்சனை செய்வார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்த கே.எஸ்.அழகிரி, நெல்லையில் விடுதியில் தங்காமல் புறநகரில் தனியாருக்கு சொந்தமான பங்களாவில் தங்கிவிட்டு நேராக பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் நடைபெற்ற திசையன்விளைக்கே சென்றுவிட்டார்.
இதனிடையே நாங்குநேரியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி அம்புரோஸ் என்பவர், கே.எஸ்.அழகிரி திசையன்விளை வரும் போது வெடி குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்து வாட்ஸ் அப்பில் பதிவு போட்டதால் அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications