பெண் சப் இன்ஸ்பெக்டர் கழுத்திலேயே கத்தியை இறக்கிய இளைஞர்.. நடுங்கிப்போன நெல்லை
நெல்லை அருகே கோயில் திருவிழாவில் பேனர்களை அகற்றுவது தொடர்பான தகராறில் பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி: நெல்லை அருகே கோயில் திருவிழாவில் பேனர்களை அகற்றுவது தொடர்பான தகராறில் பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கத்திக்குத்துக்கு ஆளான சப் இன்ஸ்பெக்டரின் பெயர் மார்கரெட் தெரசா என்பதாகும். நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த பழவூர் கிராமத்தில் கோயில் கொடை விழா நடைபெற்றது.
இந்த கோயில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் உதவி காவல் ஆய்வாளர் மார்கரெட் தெரசா உள்ளிட்ட காவலர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

கழுத்தில் கத்திக்குத்து
அப்போது, பக்தர்களை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டதை காவல் துறையினர் அகற்ற முயன்றனர். இதனால், ஆறுமுகம் என்பவர் காவல் துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, அப்போது, எதிர்பாராத விதமாக ஆறுமுகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கண் இமைக்கும் நேரத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசாவை கழுத்தில் குத்தினார்.

ரத்த வெள்ளம்
இதனால், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கழுத்திலும், கன்னத்திலும் காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை எடுத்து வருகிறார் காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசா. அவரிடம் காவல்துறை உயரதிகாரிகள் நலம் விசாரித்தனர்.

ஆறுமுகம் கைது
இதனையடுத்து அருகில் இருந்த சக காவலர்கள் ஆறுமுகத்தை சுற்றி வளைத்து கைது செய்தனர். ஆறுமுகம் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பேசிக்கொண்டிருக்கும் போதே கத்தியால் குத்தியது ஏன் என்றும்? கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு கத்தி கொண்டு வரப்பட்டதா என்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

முன்பகையால் கத்திக்குத்து
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதையில் வாகனத்தை ஓட்டியதாக கூறி ஆறுமுகம் என்பவர் மீது உதவி ஆய்வாளர் மார்கரேட் தெரசா ஏற்கெனவே வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்திருந்தார். முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. கோவில் விழாவில் பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications