பாலோடு கலந்த ரத்தம்.. தலை துண்டாகி பலியான பெண்.! ஆவின் பால் பண்ணையில் ஷாக்.. என்ன நடந்தது?
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் நேற்று இரவு பால் பாக்கெட்டுகள் உற்பத்தியின் போது பணியில் இருந்த உமா மகேஸ்வரி என்கிற பெண் ஒப்பந்த தொழிலாளரின் சுடிதார் துப்பட்டா இயந்திரத்தின் கன்வேயர் பெல்டில் சிக்கி தலை துண்டாகி நிகழ்விடத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே காக்களூரில் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் பால் இங்கு ப்ராசஸ் செய்யப்பட்டு பாக்கெட்டுகளாக தயார் செய்யப்பட்டு அப்பகுதி மக்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

தினமும் சுமார் ஒரு லட்சம் லிட்டர் பால் மற்றும் பால் பொருட்கள் இங்கிருந்து பொதுமக்களுக்காக பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பால் உற்பத்தியாலையில் பால் தயார் செய்யப்பட்டு வந்தது. அப்போது கன்வேயர் பெல்ட்டில் உற்பத்தி ஆகி வரும் பால் பாக்கெட்களை பெட்டிகளில் அடுக்கும் பணியில் உமாராணி என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் துப்பட்டா மற்றும் தலைமுடி கன்வேயர் பெல்ட்டில் சிக்கியதாக கூறப்படுகிறது.
இயந்திரம் அருகே மோட்டார் இருந்ததால் அவர் தலை சிக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென மோட்டார் பெல்ட்டில் தலைமுடியும் துப்பட்டாவும் சிக்கியதால் அவர் நிலைகுலைந்து போனார். ஆனால் சுதாரித்து எழுவதற்குள் அவரது தலை பெல்ட்டில் சிக்கி துண்டானது. இதையடுத்து ஆவின் நிர்வாகத்தினர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளுவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த உமா ராணி காக்களூர் சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தங்கி வசித்து வந்துள்ளார். அவரது கணவர் அப்பகுதியில் உள்ள மற்றொரு தொழிற்சாலையில் பணியாற்றி வந்திருக்கிறார். 6 மாதங்களுக்கு மேலாக அங்கு உமாராணி பணி செய்து வந்த நிலையில் தற்போது விபத்தில் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில்,பால் பண்ணையில் பணி செய்யும் பணியாளர்களின் தலைமுடி உதிர்ந்து பால் மற்றும் பால் பொருட்களில் கலந்து விடக்கூடாது என்பதற்காக தலையில் அதற்கான கவச தொப்பி அணிவது வழக்கம், அதுமட்டுமின்றி மேலாடைகள் இது போன்ற தருணங்களில் இயந்திரங்களில் சிக்கி விடக்கூடாது என்பதற்காகவும், பாதுகாப்பு வசதிக்காவும் ஓவர் கோட் போட்டுத் தான் பணி செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இதற்கிடையே பலியான பெண் ஓவர் கோட் அணிந்ததற்கான அடையாளம் ஏதுமில்லை, ஒருவேளை அவர் ஓவர் கோட் போட்டு பணி செய்திருந்தால் அவரது துப்பட்டா இயந்திரத்தில் சிக்கியிருக்க வாய்ப்பில்லை, அதனால் இந்த உயிரிழப்பும் தடுக்கப்பட்டிருக்கும் என்பதால் பணியாளர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
மேலும் இனி வருங்காலங்களில் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆவின் பால் பண்ணைகளில் பணி செய்யும் தொழிலாளர்கள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த வேண்டும் எனவும், உயிரிழந்த உமா ராணியின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications