கீழச்சேரி மாணவி மரணத்திற்கு காரணம்..சிபிசிஐடி விசாரணைக்குப் பின் தெரியும்.. மாவட்ட ஆட்சியர்
திருவள்ளூர்: கிழச்சேரி பள்ளி மாணவி மரணத்திற்கான காரணம் சிபிசிஐடி விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியுள்ளார். முதல் தகவல் அறிக்கையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகிலுள்ள கீழ்சேரிப் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் திருத்தணி அருகே உள்ள தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி பள்ளி விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.
வழக்கம்போல இன்று காலை அவர், பள்ளிக்குச் செல்ல தயாரானார். ஆனால் அவர் பள்ளிக்கு வரவில்லை. அதனால் சந்தேகமடைந்த சக மாணவிகள் விடுதி அறைக்குச் சென்று பார்த்தனர். அங்கு அவர் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். அதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் சத்தம் போட்டு அனைவரையும் அழைத்தனர். பின்னர் அந்த மாணவி தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கும் தகவலை விடுதிப் பொறுப்பாளர், பள்ளி நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

மாணவி தற்கொலை
சம்பவ இடத்துக்கு வந்த விடுதிப் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் மாணவியைக் கீழே இறக்கி முதலுதவி செய்தனர்.
அதைத் தொடர்ந்து ஆம்புலன்சுக்கும், மப்பேடு காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், மாணவி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து மப்பேடு போலீஸார், அவரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலை மறியல்
உடனடியாக அவரின் பெற்றோர், உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் மரணம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டனர். அதற்கு பள்ளி நிர்வாகம் சரியான பதிலளிக்கவில்லை என்று தெரிகிறது. அதனால் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள், திருத்தணியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை அவர்கள் சிறைப்பிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம்
தகவல் அறிந்ததும் ஆர்.டி.ஓ அர்ஷத் பேகம், டி.எஸ்.பி சாரதி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவியின் சொந்த ஊரிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திருவள்ளூரை நோக்கிச் செல்ல ஆயத்தமாகினர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அதனால் காவல்துறையினருக்கும், மாணவியின் உறவினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு
இந்த நிலையில் மாணவி படித்த பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், டி.ஐ.ஜி சத்ய பிரியா, எஸ்.பி பா.சீபாஸ் கல்யாண், டிஎஸ்பிக்கள் மற்றும் போலீஸார் வந்து விசாரணை மேற்கொண்டனர். திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேந்திரனும் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவியின் பெற்றோர், உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். மாணவி மரண வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி காவல் ஆய்வாளர் திரிபுரசுந்தரி தலைமையில் அதிகாரிகள் பள்ளி, விடுதியில் விசாரணை மேற்கொண்டனர்.

மரணத்திற்கு காரணம்
மாணவி மரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்,மாணவி மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டிருப்பதாக கூறினார். மாணவி இறப்பு குறித்து நானும் கல்வி அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டோம், வழக்கின் விசாரணை முழுமையான வெளிப்படை தன்மையோடு நடைபெறும் என்றும் கூறினார். காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடப்பட்டுள்ளது. சிபிசிஐடி விசாரணைக்குப் பிறகே தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications