"அங்கிள் என்னை விட்டுருங்க" கதறிய திருவள்ளூர் சிறுமி! பாலியல் கொடூரனை செக் போஸ்ட்டில் தேடும் போலீஸ்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 10 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட நிலையில், ஒரு வாரமாகியும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக-ஆந்திர எல்லையான எளாவூர் சோதனைச்சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக ஆட்சியாளர்கள் சொல்லி வந்தாலும், ஆங்காங்கே பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நடந்த வண்ணம்தான் இருக்கின்றன. சின்னஞ்சிறு குழந்தைகள் என்றும் பாராமல் இந்த வக்கிரக்காரர்களுக்குப் புத்தி ஏன் பேதலிக்கிறதோ தெரியவில்லை. தாய், சகோதரி, தோழியாக நினைக்க வேண்டிய பெண்களுக்கு பாலியல் கொடூரம் மட்டுமல்லாமல் வரதட்சணை கொடுமை உள்ளிட்டவை நடக்கத்தான் செய்கின்றன.

திருவள்ளூரில் கடந்த சனிக்கிழமை, 10 வயதுச் சிறுமி பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். பொதுவாகப் பள்ளி நேரம் மதியம் 3 மணிக்கு விடப்படும் நிலையில், அன்றைய தினம் 12 மணிக்கே விடப்பட்டதால், அவர் தனது பாட்டி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போதுதான் சிறுமியைப் பின்தொடர்ந்த அந்த நபர், அவரைப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியுள்ளார்.
பாட்டி வீட்டுக்குச் செல்ல பேருந்து வசதி இல்லாததால், அந்தச் சிறுமி நடந்தே சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்தச் சிறுமியைப் பின்தொடர்ந்த மர்ம நபர், சிறுமியை ஆள் இல்லாத இடத்திற்குக் தூக்கிச் சென்று கத்தி முனையில் வன்கொடுமைக்குள்ளாக்கியுள்ளார். அரை மணி நேரத்திற்கும் மேலாகச் சிறுமிக்கு இந்த கொடுமை நேர்ந்துள்ளது. அங்கிருந்து தப்பச் சிறுமி முயற்சித்தும், அவரைத் துரத்திப் பிடித்து அடித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இந்த நிலையில், காவல் நிலையத்தில் வழக்குக் கொடுத்தும் குற்றவாளி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்தக் கொடுமை குறித்துத் தாய் கூறுகையில், "சனிக்கிழமை மதியம் பள்ளி முடிந்து பாட்டி வீட்டுக்குச் சென்றபோது என் மகளை யாரோ ஒருவன் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். எனது மகள் இப்போது ஆபத்தான நிலையில் உள்ளார். 'ப்ளீஸ் அங்கிள் என்னை விட்டுருங்க, என்னை அடிக்காதீங்க' என்று சொல்லியிருக்கிறாள். ஆனால், 'கத்தினால் குத்திக் கொலை செய்துவிடுவேன்' என்று மிரட்டியிருக்கான். என் குழந்தையை அடித்ததில் வாய் எல்லாம் ரத்தம் வந்திருக்கிறது. என் வீட்டுக்கு அழுதுக்கிட்டே வந்த என் பிள்ளையிடம், 'என்னம்மா?' என்று கேட்டபோது, 'ஒரு இந்திக்காரப் பையன் என்னை பேட் டச் செய்துவிட்டான்' என்று அழுதாள். குழந்தைக்கு முகமெல்லாம் ரத்தம். அவனை கண்டுபிடித்துச் சுட்டுக் கொல்ல வேண்டும்" என்று அந்தக் தாய் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் நடந்து ஒரு வாரமாகியும் குற்றவாளியைக் கண்டுபிடிக்கவில்லை. இது குறித்து வீடியோ காட்சிகளும் வெளியாகின. யாரோ ஒரு நபர் சிறுமியைப் பின்தொடர்வதும், உடனே போய் தூக்கிக்கொண்டு ஓடுவதும், அந்தச் சிறுமி தப்பிக்க முயற்சிப்பதும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளன.
குற்றவாளியைக் கண்டுபிடிக்கவில்லை என்று கூறி சிறுமியின் உறவினர்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், குற்றவாளியைப் பிடிக்க தமிழக-ஆந்திர எல்லையான எளாவூர் சோதனைச்சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். மாவட்ட எஸ்.பி. தலைமையில் 3 டி.எஸ்.பி.க்கள் உள்பட 8 தனிப்படைகள் அமைத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தினர்.












Click it and Unblock the Notifications