விஷ பூச்சிகள் தொல்லை...வெள்ளநீர் எப்போது வடியும்- வீடுகளுக்குள் கவலையுடன் காத்திருக்கும் மக்கள்
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. வெள்ளநீரை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளூர்: ஆறுநாட்கள் கொட்டித்தீர்த்த அடைமழையால் சென்னை, திருவள்ளூரில் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. மழை வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வெள்ளம் எப்போது வடியும் என்று வீடுகளுக்குள் முடங்கியுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். வெள்ளநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையாகும்.
சென்னையில் கடந்த 6 நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் மாநகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என அனைத்து பகுதிகளிலுமே வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு பெருவெள்ளத்தில் தப்பிய பகுதிகளிலும் இந்த ஆண்டு வெள்ளநீர் தேங்கியுள்ளதால் தமிழக தலைநகரமே தத்தளிக்கிறது. பல லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் முடக்கிப்போட்டுள்ளது சென்னை பெருவெள்ளம்.

போராட்டம்
ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டை பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளதால் வீடுகளில் தண்ணீர் வெளியேறாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தண்ணீர் வடிய எந்த ஒரு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதால் சிறு குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சாலை மறியல்
பலமுறை சட்டமன்ற உறுப்பினரிடமும் மாநகராட்சி அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து திருவொற்றியூர் பொதுமக்கள் நெடுஞ்சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வண்ணாரப்பேட்டை போலீசார் அவர்களிடம் சமரசம் பேசினர். பேச்சுவார்த்தைக்கு கட்டுப்படாத பொதுமக்கள் காணவில்லை காணவில்லை என கோஷமிட்ட படியே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வெள்ளநீரினால் பாதிப்பு
திருவள்ளூர் அடுத்த புட்லூர் ராமாபுரம் தண்ணீர் குளம் ஆகிய பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சாலைகளில் தேங்கி உள்ளது மற்றும் குடியிருப்பு பகுதியிலும் மழை சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் மேலும் அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட வெளியே வர முடியாத சூழ்நிலை அப்பகுதியில் நிலவுகிறது. சிறுவர்கள் முதல் வயதானவர்கள்வரை மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மழைநீரை வெளியேற்ற கோரிக்கை
உடனடியாக மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர் தொடர்ந்து மழை நீடித்து வரும் நிலையில் அப்பகுதி வெள்ளக்காடாக மாறக்கூடும் என்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பகுதியை கண்காணித்து மழை நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
Recommended Video

விஷப்பூச்சிகள் தொல்லை
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது இந்நிலையில் ஆங்காங்கே விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது மரக்காணத்தை அடுத்த பனிச்சமேடு குப்பம் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன இங்கே உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மழைநீருடன் கலந்து விஷப்பூச்சிகள் உலாவுதல் அச்சத்துடனே இருந்து வருவதாகவும் தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications