பட்டப்பகலில் பெண் வீடு புகுந்து படுகொலை.. குற்றவாளியை 6 மணி நேரத்தில் தட்டி தூக்கிய பொன்னேரி போலீஸ்!
திருவள்ளூர்: கூடுவாஞ்சேரி பகுதியில் பட்டப்பகலில் பெண் ஒருவர் வீடு புகுந்து கொடூரமாகக் கொலை செய்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை 6 மணி நேரத்தில் போலீசார் பிடித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள கூடுவாஞ்சேரி கனகவல்லிபுரம் கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இவர் தனது மனைவி சரஸ்வதி (53) உடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு குமார் ஒரு வேலைக்காக பொன்னேரி சென்றுள்ளார். அப்போது சரஸ்வதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் சரஸ்வதியை கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
வீடு புகுந்து கொலை: சரஸ்வதி வீட்டில் தனியாக இருந்த நேரம் பார்த்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அவரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்த அவர்கள், அங்கிருந்து தப்பியோடினர். பொன்னேரிக்கு சென்ற கணவர் குமார் திரும்ப வந்து பார்த்த போது மனைவி சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
இதைப் பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டதில் அக்கம் பக்கத்தினர் அங்கே ஓடி வந்துள்ளனர். உடனடியாக இது குறித்து 108 ஆம்புலன்ஸுக்கும் பொன்னேரி காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சரஸ்வதியை பரிசோதனை செய்துள்ளனர். அதில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரிய வந்தது.
போலீஸ் விசாரணை: இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொன்னேரி போலீசார்,விசாரணையை ஆரம்பித்தனர். உதவி கமிஷனர் சபாபதி சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணையைத் தொடங்கிய நடத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சரஸ்வதியின் உடலை மீட்ட போலீசார் அதைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தங்க செயின் திருடப்பட்ட நிலையில், அந்த கோணத்தில் போலீஸ் விசாரணையை நடத்தினர். அதேநேரம் வேறு முன்விரோதம் காரணமாகக் கொலை செய்துவிட்டு திசை திருப்ப நகையை திருடிச் சென்றனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலை சம்பவம் பெரும் பரபர பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆறே மணி நேரத்தில் குற்றவாளி கைது: விசாரணையைத் துரிதப்படுத்திய போலீஸ் வெறும் ஆறே மணி நேரத்தில் குற்றவாளியைக் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், உயிரிழந்த சரஸ்வதி என்ற அந்த பெண்ணின் சகோதரி மகன் அசோக் குமார் என்பவரே கொலை செய்தது தெரியவந்தது. சரஸ்வதியிடம் சென்று அசோக் குமார் பணம் கேட்டுள்ளார். இருப்பினும், சரஸ்வதி பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.
இதனால் சரஸ்வதி வீட்டில் தனியாக இருந்த நேரம் பார்த்து அசோக் குமார் வீட்டிற்குச் சென்றுள்ளார். சகோதரி மகன் என்பதால் சரஸ்வதி கூச்சலிடவில்லை. அப்போது சரியான நேரம் பார்த்து சரஸ்வதியைக் கொலை செய்துவிட்டு, தங்க செயினை எடுத்துக் கொண்டு அசோக் குமார் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பணத்திற்காகத் தாயின் சகோதரியையே இளைஞர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications