8 ஆடுகள்.. அதென்ன கழுத்தில் "பற்கள்".. ஒரே நாளில் இப்படியா? பூண்டியின் தூங்கா கிராமம் தெரியுமா?
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூண்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இரவெல்லாம் தூங்காமல் அச்சமடைந்து உள்ளதால், வனத்துறையினரே நேரடியாக இதில் களமிறங்கி உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஏரிக்கரை அருகே ஒரு காட்டுப்பகுதி இருக்கிறது.. இந்த பகுதியில், மோவூர் என்ற கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் ஆவர்.. இதனால், வீடுகளில் ஆடு, மாடுகளையும் வளர்த்து வருகின்றனர்.. இதுதான் இவர்களது பிரதான வாழ்வாதாரமாகும். இந்த நிலையில் சமீபநாட்களாகவே, இந்த கிராமத்தில் இருக்கும் கால்நடைகள் திடீரென இறக்க ஆரம்பித்துள்ளது.. இரவு வரை நன்றாக இருக்கும் ஆடு,மாடுகள், பொழுது விடிந்ததும் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு கிராம மக்கள் அதிர்ந்தனர்..
ரத்த காயங்கள்: இப்படித்தான், ரஜினி என்பவரின் 8 ஆடுகள் இறந்துவிட்டன. இறந்துபோன விலங்குகளின் உடம்பில், ரத்த காயங்கள் கிடந்தன.. அப்போதுதான், மர்ம விலங்கு கடித்து, இந்த ஆடுகள் இறந்ததாக சந்தேகிக்கப்பட்டது. இறந்த ஆடுகளின் கழுத்து பகுதியில் நிறைய காயங்களும் கிடந்தன. அதுமட்டுமல்லாமல் எல்லா ஆடுகளின் கழுத்திலும் விலங்கின் பற்களின் தடம் பதிந்து இருந்தது.
அதனால், இந்த ஆடுகளை எல்லாம், சிறுத்தைப்புலி கடித்து கொன்றுவிட்டு சென்றதாக திடீரென அந்த பகுதியில் தகவல் பரவியது.
இதனால், வனத்துறை அதிகாரிகள் உடனடியாக கிராமத்துக்கு வந்து ஆய்வு நடத்தினர். சிறுத்தை நடமாட்டம் இருப்பது போல தெரியவில்லை என்றார்கள்.. ஆனாலும், கிராம மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளதால், வீட்டைவிட்டு வெளியே வராமலும் பயந்துபோய் உள்ளனர். அதனால், சிறுத்தைப்புலி நடமாட்டம் குறித்து வனத்துறை ஊழியர்கள் காட்டுப்பகுதிக்குள் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள்.. அத்துடன், சிறுத்தைப்புலி கால் தடம் பதிவாகி உள்ளதா என்றும் பார்வையிட்டு வருகின்றனர்..
சிறுத்தை நடமாட்டம்: ஆனால் இதுவரை சிறுத்தை நடமாட்டம் அப்பகுதியில் இல்லையாம். இருந்தாலும், ஆடுகளை கொன்ற மர்மவிலங்கு எது என்று தெரியவில்லை.. எனவே, அந்த விலங்கினை கண்டுபிடிக்க, அந்த கிராமத்தை சுற்றிலும் 5 கண்காணிப்பு கேமராக்களை இன்று அதிகாரிகள் பொருத்தியிருக்கிறார்கள். அதில் சிறுத்தைப்புலி அல்லது வேறு ஏதேனும் உருவம் பதிவாகி உள்ளதா என்றும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
அதேபோல, பூண்டி காப்புக்காடு பகுதியிலும் ரோந்து சென்று மர்ம விலங்கு நடமாட்டம் குறித்து பார்வையிட்டனர். பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டாலும், மோவூர் கிராம மக்கள், இன்னமும் சிறுத்தை புலி பீதியால் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்...
வனவிலங்குகள்: காரணம், இந்த கிராமத்திற்கும், வனவிலங்குகள் உள்ள காட்டுப்பகுதிக்கும் மிகமிக குறைந்த தூரமே இருக்கிறதாம். அதனால், ஊருக்குள் வந்தது சிறுத்தையாகத்தான் இருக்கும் என்று வெலவெலத்து சொல்லகிறார்கள்.. எனினும், வனத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதால், அந்த மர்மவிலங்கை விரைவில் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று நம்பப்படுகிறது. இதனால், பூண்டி பகுதியே மிகுந்த பரபரப்பாக காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications