கீழச்சேரி பள்ளி மாணவி தற்கொலை.. சந்தேக மரணமாக வழக்குப் பதிவு.. டிஐஜி சத்யபிரியா
திருவள்ளூர்: கீழச்சேரி பள்ளி மாணவி தற்கொலை வழக்கு சந்தேக மரண வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா தகவல் தெரிவித்துள்ளார். பிளஸ் 2 மாணவியின் உடல் தூக்கிட்ட நிலையில் தான் கண்டெடுக்கப்பட்டது. மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி சிறிது நேரத்தில் விசாரிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
திருவள்ளூரில் மப்பேடு அருகே கீழச்சேரியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் தெக்களூரை சேர்ந்த 17 வயது மாணவி தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். இன்று காலை அந்த மாணவி விடுதியிலிருந்து பள்ளிக்கு செல்ல சீருடை அணிந்து கொண்டு தயாரானதாக தெரிகிறது. இதையடுத்து தோழிகளுடன் சென்று உணவு அருந்திவிட்டு சென்ற அந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.
விடுதி அறையில் தூக்கிட்ட நிலையில் இருந்த மாணவியின் சடலத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் ஹாஸ்டல் வார்டனிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தகவலறிந்த பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பெற்றோர் குற்றச்சாட்டு
அந்த மாணவி காலையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அந்த தகவலை பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு மிகவும் தாமதமாக தெரிவித்ததாகவும் அது கூட இறந்தார் என கூறாமல் உடல்நிலை சரியில்லாததால் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம் என்று மட்டுமே கூறியதாக பெற்றோரும் உறவினர்களும் புகார் தெரிவித்தனர்

கள்ளக்குறிச்சி
ஏற்கெனவே கள்ளக்குறிச்சியில் நடந்தது போல் கலவரம் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா, திருவள்ளூர் மாவட்ட எஸ் பி கல்யாண், சிபிசிஐடி எஸ்பி செல்வகுமார் உள்ளிட்டோர் அந்த பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.

எஸ்.பி.கல்யாண்
மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பள்ளி நிர்வாகத்தின் மீது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக ஹாஸ்டல் வார்டன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ் பி கல்யாண், திருவள்ளூரில் பள்ளியில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

மாணவியின் உடல் மீட்பு
உடனடியாக அந்த இடத்திற்கு போய் மாணவியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்துள்ளோம். பள்ளிகளில் எந்த மாணவர்கள் இருந்தாலும் அந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உடனடியாக மாற்றிவிட வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனவே ஹைகோர்ட் அறிவுறுத்தலின்படி மாணவி மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளோம். மாணவி எப்படி இறந்தார் என்பது குறித்து சிபிசிஐடி விசாரணையில் தெரியவரும் என்றார்.

டிஐஜி சத்யபிரியா
மாணவி மரணத்தால் உறவினர்கள் நடத்தி வரும் சாலை மறியலால் பொதட்டூர்பேட்டை- திருத்தணி இடையே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா, கீழச்சேரி பள்ளி மாணவி தற்கொலை வழக்கு சந்தேக மரண வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். வழக்கு விசாரணைப் பற்றி தெரிவிக்கக் கூடாது என்று கூறிய அவர், பிளஸ் 2 மாணவியின் உடல் தூக்கிட்ட நிலையில் தான் கண்டெடுக்கப்பட்டது.
Recommended Video

தொடரும் தற்கொலைகள்
மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி சிறிது நேரத்தில் விசாரிக்க உள்ளதாகவும் கூறினார். கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவியின் மரணத்தில் உள்ள மர்மம் விலகும் முன்பாகவே திருவள்ளூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது பெற்றோர்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications