திருவள்ளூர் அருகே பத்திரப்பதிவு ஆபிஸில் சுற்றி வளைக்கப்பட்ட சார் பதிவாளர்.. அதிரடியாக கைது
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை பத்திரப்பதிவு ஆபிஸில் ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் சார் பதிவாளர் மற்றும் அவரது உதவியாளரை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
பத்திரப்பதிவு அலுவலகங்களை பொறுத்தவரை அடிக்கடி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துகிறார்கள். புகாரின் பேரில் நடத்துவது ஒருபுறம் எனில், திடீர் சோதனையும் நடத்துகிறார்கள். பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கி கைதான சார் பதிவாளர்களே அதிகம். அப்படியான ஒரு சம்பவம் தான் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் தாலுகா ஆளாடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வ ராமச்சந்திரன் என்பவர் சார் பதிவாளராக பணியாற்றி வருகிறார்.
சார் பதிவாளர் செல்வ ராமச்சந்திரனிடம் திருத்தணி அருகே மத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 53 வயதாகும் நிலத்தரகரான ஜெய்சங்கர் என்பவர் நிலம் சம்பந்தமான கோரிக்கையுடன் அணுகிறார். ஜெய்சங்கர், திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே விளக்கணாம்பூடி புதூர் கிராமத்தில் பதிவு செய்யப்பட்ட, நில பத்திரப்பதிவு ஆவணங்களை மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு வழிகாட்டி மதிப்பீடு செய்ய அனுப்பி வைக்கும்படி வேண்டுகோள் வைத்தார்.
அதற்கு சார் பதிவாளர் செல்வ ராமச்சந்திரன் ரூ.50 ஆயிரம் லஞ்சம் தரும்படி கேட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு நில தரகர் ஜெய்சங்கர் ரூ.35 ஆயிரம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெய்சங்கர் இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் மற்றும் காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி மற்றும் போலீசார் ஆர்.கே.பேட்டை சார் பதிவாளர் அலுவலகம் அருகே மறைந்து கொண்டனர் . அப்போது ரசாயணம் தடவிய 35000 ரூபாய் நோட்டுகளை நிலத்தரகர் ஜெய்சங்கர், சார் பதிவாளர் செல்வ ராமச்சந்திரனுக்காக கொடுத்துள்ளார்.
ஜெய்சங்கரிடம் அந்த பணத்தை சார் பதிவு அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் சிவலிங்கம் என்பவர் பெற்றுக்கொண்டு சார் பதிவாளர் செல்வ ராமச்சந்திரன் காரில் வைத்திருக்கிறார் அப்போது போலீசார் அவரை சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து உதவியாளர் சிவலிங்கம், சார்-பதிவாளர் செல்வ ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications