எனக்கு அமைச்சர் பதவி கிடைக்க காரணமே ஆவடி நாசர் தான்- அமைச்சரான பின் முதல் பொதுக்கூட்டத்தில் உதயநிதி!
திருவள்ளூர் : எனக்கு அமைச்சர் பதவி கிடைக்க காரணம் அமைச்சர் ஆவடி நாசர் தான் என ஆவடியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, முதல் பொதுக்கூட்டத்தில் நேற்று பங்கேற்றார் உதயநிதி ஸ்டாலின்.
ஆவடியில் நடந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என உறுதியளித்தார்.

அன்பழகன் நூற்றாண்டு விழா
மறைந்த திமுக முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் நேற்று மாலை நடைபெற்றது. பால் வளத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான சா.மு.நாசர் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அமைச்சர் உதயநிதி பங்கேற்பு
அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக ஆவடி வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று நகர் முழுவதும் திமுக கொடிக்கம்பங்கள், வரவேற்பு பதாகைகள் என ஆவடி மாநகரம் விழாக் கோலம் பூண்டிருந்தது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ஏழைகளுக்கு தையல் இயந்திரங்கள், இளைஞர்களுக்கு கிரிக்கெட் பேட்,கால்பந்து, சிலம்பம் வீரர்களுக்கு உபகரணங்கள் மற்றும் ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்.

உங்க வீட்டுப் பிள்ளை
பின்னர் இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "பல நிகழ்ச்சிகளுக்கு எல்லோரும் என்னிடம் தேதி வாங்குவார்கள். ஆனால் ஆவடியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு நானாகவே தேதி கொடுத்தேன். கடந்த மாதம் நான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்தானதால், நானே கேட்டு இங்கு வந்திருக்கிறேன். எனக்கு எத்தனையோ பொறுப்புகள் வரலாம், போகலாம். ஆனால் எப்போதும் நான் உங்களின் வீட்டின் செல்லப் பிள்ளை தான். அமைச்சர் என்பதால் பொறுப்பான செல்லப்பிள்ளையாக இருப்பேன்." என்றார்.

அமைச்சராக முதல் பொதுக்கூட்டம்
மேலும் பேசிய உதயநிதி, "நான் ஆவடிக்கு பல முறை வந்திருக்கிறேன். 2019ஆம் ஆண்டு திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பிறகு பேசிய முதல் இடம் ஆவடி. இதே இடத்தில் தான் அன்றும் பேசினேன். இப்போது, அமைச்சராகப் பொறுப்பேற்று கட்சியின் முதல் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.

அமைச்சர் பதவி கிடைக்க காரணம்
எனக்கு அமைச்சர் பொறுப்பு கிடைக்க அமைச்சர் நாசர் அண்ணன் தான் காரணம். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மாதத்திற்கு ஒரு முறையாவது எனக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என பேசிவிடுவார். எனது செயல்பாடுகள் மூலம் இந்தப் பொறுப்புக்கு உண்மையாக இருப்பேன். ஆவடிக்கு பெரிய விளையாட்டு ஸ்டேடியம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.

உறுதி கொடுக்கிறேன்
நாசர், கிருஷ்ணசாமி உதவியுடன் நிச்சயம் கொண்டு வருவேன் என உறுதி அளிக்கிறேன். எம்.எல்.ஏ தொகுதி நிதியில் இருந்து இந்த திட்டத்தை அமைக்க உதவுவார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் நிதி ஒதுக்க கோரிக்கை விடுத்து பணிகளைத் தொடங்குவார்கள். அதற்கு நான் உறுதி அளிக்கிறேன்.

கருணாநிதி - அன்பழகன்
பேராசிரியர் கன்பழகன் - கலைஞர் கருணாநிதி இருவரும் நட்புக்கு இலக்கணமாக இருந்தார்கள். பெரியார் வழியில் வந்த பேராசியர் அன்பழகன் திராவிட இயக்கத்தின் கருவூலம், பெரியார் மற்றும் அண்ணாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட சமூக நீதி கொள்கையை தனது வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் செய்தார். எனது திருமணமும் பேராசிரியர் தலைமையில் தான் நடைபெற்றது. இளைஞர் அணி செயலாளராக நான் பதவி ஏற்றபோது முதல் வாழ்த்து அவர் தான் கூறினார்." எனப் பேசினார்.

என் காரையும் இரண்டாகப் பிளந்திருப்பாங்க
தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "எதிர்க்கட்சித் தலைவர்கள் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவருமே சட்டமன்றக் கூட்டம் நடக்கும்போது எனது காரில் ஏற முற்பட்டார்கள். நானும் எடுத்துக் கொண்டு செல்லத்தான் சொன்னேன். ஆனால் கமலாலயம் போக வேண்டாம் என்றேன். எடுத்துக் கொண்டு சென்றிருந்தால் என்ன ஆகி இருக்கும்? காரை இரண்டாக பிளந்து இருப்பார்கள்." என கிண்டலாகப் பேசினார்.












Click it and Unblock the Notifications