விபூதி பாக்கெட்டில் அன்னை தெரசா.. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அர்ச்சகர்கள் சஸ்பெண்ட்.. அதிரடி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலை கோவிலில் அன்னை தெரசா படம் பொறித்த பாக்கெட்டுகளில் விபூதி வழங்கியதற்கு இந்து முன்னணி அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த விவகாரம் விவாதத்தை கிளப்பிய நிலையில் கோவிலில் 2 அர்ச்சகர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தான் தற்போது கோடை விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது. நேற்றும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் தான் பக்தர்களுக்கு பிரசாதமாக விபூதி வழங்கப்பட்டது. இந்த விபூதி என்பது பொதுவாக அண்ணாமலையார் படம்பொறித்த சிறிய பாக்கெட்டுகளில் வழங்கப்படும். ஆனால் நேற்று பக்தர்களுக்கு விபூதி வேறு பாக்கெட்டுகளில் வழங்கப்பட்டது.
அதாவது அன்னை தெரசா படம் பொறித்த பாக்கெட்டுகளில் விபூதி பிரசாதமாக வழங்கப்பட்டு இருந்தது. தனியார் ஆடை நிறுவனத்தின் பெயரில் அன்னை தெரசா படம் பாக்கெட்டுகளில் பொறிக்கப்பட்டு இருந்தது. இது சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் தான் கோவிலுக்குள்ளேயே மதமாற்ற நடவடிக்கைகளில் சிலர் ஈடுபடுவதாக இந்து முன்னணி அமைப்பினர் குற்றம்சாட்டினர்.
மேலும் இன்று காலையில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் கோவில் இணை ஆணையர் குமரேசன் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அன்னை தெரசா படம் பொறித்த பாக்கெட்டுகளில் விபூதி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த தர்ணா போராட்டத்தின் காரணமாக தற்போது திருவண்ணாமலை அண்ணாமலையாளர் கோவில் அர்ச்சகர்கள் 2 பேரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து கோவில் இணை ஆணையர் குமரேசன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கோவில் பணியாற்றி வந்த சோமநாத குருக்கள், முத்துக்குமாரசாமி குருக்கள் ஆகியோர் 6 மாதம் பணி இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் இருவரும் கோவில் சார்ந்த பணிகளில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
*******












Click it and Unblock the Notifications