பல்லை கழற்றிவிடுவேன்! போயா வெளியே.. உளுந்து விதைக்கு ரசீது கேட்ட விவசாயியை விரட்டிய வேளாண் அதிகாரி!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உளுந்து விதைக்கு ரசீது கேட்கச் சென்ற விவசாயி பிரகாஷ் என்பவரை அங்கிருந்த வேளாண் அதிகாரி ''பல்லை கழட்டிபுடுவேன்.. வெளியே போயா'' என விரட்டிய நிகழ்வு விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வல்லம் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் வந்தவாசி வேளாண் அலுவலகத்தில் உளுந்து விதை வாங்கி சாகுபடி செய்திருக்கிறார். இதனிடையே தாம் வாங்கிய உளுந்து விதைக்கான ரசீதை கேட்டு ஒரு முறை இரு முறை அல்ல பல முறை அந்த வேளாண் அலுவலகத்துக்கு அலையாய் அலைந்து திரிந்திருக்கிறார். இதனிடையே வேளாண் அதிகாரி கோவிந்தராஜனிடம் 4 மாதமாக கேட்கிறேன் எனக் கூறி வேளாண் அலுவலகத்தில் தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்திருக்கிறார் விவசாயி பிரகாஷ்.

இதனை ஊழியர்களுக்கு மத்தியில் தனக்கு ஏற்பட்ட கவுரவ குறைச்சலாக எடுத்துக்கொண்ட வேளாண் அதிகாரி கோவிந்தராஜன், ''யோவ், என்ன வாயா போயான்னு பேசுற, பல்லை கழட்டிபுடுவேன்.. வெளியே போயா.. '' எனக் கத்தி நாக்கை துருத்தி மிரட்டி விவசாயி பிரகாஷை விரட்டியடிப்பதில் குறியாக இருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அங்கிருந்த வேளாண் துறை அலுவலர்கள் விவசாயி பிரகாஷை சமாதானம் செய்து வெளியே அனுப்பி வைத்தனர்.
இதனிடையே வேளாண் அதிகாரி கோவிந்தராஜன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயி பிரகாஷ் கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில், நடந்த நிகழ்வு குறித்து தனி விளக்கம் கொடுப்பதாக கூறியிருக்கிறார் வேளாண் அதிகாரி. வேளாண்துறை அலுவலகத்திற்கு வரும் விவசாயிகள் எல்லோரும் படித்தவர்களாக இருக்க வாய்ப்பில்லை. சற்று முன்னபின்ன அவர்கள் ஆதங்கத்தை கொடித்தீர்த்தால் அதனை காது கொடுத்துக் கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டியது தான் அதிகாரிகள் கடமை.
வந்தவாசி மட்டுமில்லை தமிழகத்தின் பல வேளாண் அலுவலகங்களில் இது போன்ற சலசலப்புகள் அவ்வப்போது ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
