ஹிட்லர் செய்யாத கொடூரம்.. விவசாயிகளுக்கு செய்த திமுக அரசு! பணமூட்டையோடு வரும் வேலு! அன்புமணி அட்டாக்
திருவண்ணாமலை: தன்னுடைய அதிகாரம் குறைந்துவிடும் என்பதனால் திருவண்ணாமலை மாவட்டத்தை நிர்வாக ரீதியாகப் பிரிக்காமல் எ.வ.வேலு பார்த்துக்கொள்கிறார் எனவும், எ.வ. வேலுவும், அவரது மகனும் தேர்தல் நேரத்தில் மூட்டை மூட்டையாகப் பணத்தைக் கொண்டு வருவார்கள் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற பெயரில் அன்புமணி ராமதாஸ் 100 நாட்கள் நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நடைபயணம் மேற்கொண்ட அவர் துண்டுப் பிரசுரங்கள் வழங்கினார்.
தொடர்ந்து மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ்," தன்னுடைய ராஜ்ஜியம் குறைந்துவிடும் என்பதனால் மிகப்பெரிய மாவட்டமான திருவண்ணாமலையைப் பிரிக்க விடாமல் எ.வ. வேலு பார்த்துக் கொள்கிறார். ஒரு கோடியே 30 லட்சம் இளைஞர்கள் தமிழ்நாட்டில் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.

பாமக
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தனியார் நிறுவனங்களில் 75 சதவீதம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என வாக்குறுதி கொடுத்த திமுக அதனை நிறைவேற்றவில்லை. அவர்கள் சொன்னது போல அந்தச் சட்டத்தை நிறைவேற்றி செயல்பாட்டுக்குக் கொண்டு வந்திருந்தால் இந்நேரம் தமிழக இளைஞர்கள் மதுவுக்கும் போதைக்கும் அடிமையாகி இருக்க மாட்டார்கள். வேலைக்குச் சென்று இருப்பார்கள். முதலமைச்சர் சென்றிருப்பது சுற்றுப்பயணம் அல்ல சுற்றுலா. இந்த நான்கரை ஆண்டுகளில் திமுக கொண்டு வந்ததாகச் சொன்ன முதலீடுகளில் வெறும் 10% மட்டும்தான் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
அன்புமணி ராமதாஸ்
90% செயல்பாட்டுக்கு வரவில்லை. அது பற்றி நாங்கள் விரைவில் புத்தகமாக வெளியிட உள்ளோம். விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்த திமுக அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். ஹிட்லர் கூட விவசாயிகளை சித்திரவதை செய்யவில்லை, சிறையில் அடைக்கவில்லை. ஆனால் தமிழக அரசு விவசாயிகளை கொடுமைப்படுத்துகிறது. நமக்கு சோறு போடுகின்ற கடவுள் விவசாயிகள். அப்படிப்பட்ட விவசாயிகள் ஏழு பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது.
திமுக அரசு
குண்டர் சட்டத்தில் யாரைச் சிறையில் போடுவார்கள்? கள்ளச்சாராயம் காய்ச்சுபவன், போதைப் பொருள் விற்பவன், மணல் கடத்துபவன், கொலை, கொள்ளை செய்பவனைத்தான் குண்டர் சட்டத்தில் போடுவார்கள். தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டுக்காக 46 ஆண்டு காலமாக டாக்டர் ராமதாஸ் போராடி வருகிறார். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தும் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீட்டை கொடுக்க தமிழக அரசு மறுத்து வருகிறது. தரவுகளை நியாயப்படுத்தி வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என உச்சநீதிமன்றம் சொல்லியுள்ளது.
திருவண்ணாமலை
இந்த உள் ஒதுக்கீட்டைக் கொடுப்பதற்கு சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கூட தேவை கிடையாது. தமிழக அரசு தன்னிடம் இருக்கக்கூடிய தரவுகளைப் பயன்படுத்தி இந்த உள் ஒதுக்கீட்டைக் கொடுக்கலாம். ஆனால் இதனை கொடுப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமில்லை. தமிழக அரசு முறைப்படி சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தினால், உண்மையில் எந்த சமூகம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது, யாருக்கு இட ஒதுக்கீடு அதிக அளவில் தேவை இருக்கிறது என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்ப இட ஒதுக்கீட்டை உயர்த்தி கொடுக்கலாம்.
எ.வ.வேலு
இதைத்தான் பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. ஆனால் திமுக அரசு அதனை செய்ய மறுக்கிறது. 2026 தேர்தல் விரைவில் வரப்போகிறது. அமைச்சர் எ.வ. வேலுவும் அவரது மகனும் பணமூட்டைகளை தூக்கிக்கொண்டு உங்களது வாக்குகளைப் பெறுவதற்காக வருவார்கள். ஏமாந்து விடாதீர்கள். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறக் கூடாது." என்றார்.












Click it and Unblock the Notifications