எச்சில் இலை அங்கப்பிரதட்சணம்.. எப்படி அனுமதி தரலாம்? திருவண்ணாமலையிலிருந்து கிளம்பிட்டாரு அர்ச்சகர்
திருவண்ணாமலை: பக்தர்கள் உண்ட இலையில் அங்கப் பிரதட்சணம் செய்வது தொடர்பாக மீண்டும் ஒரு அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் நெரூர் சதாசிவபிரம்மேந்திர கோயிலில் வருடந்தோறும் சதாசிவ பிரம்மேந்திரர் ஆராதனை விழா நடைபெறும். இந்த விழாவின் நிறைவுநாளில் பக்தர்கள் உண்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்து, நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கமாக இருக்கிறது.. ஆனால், இந்த நடைமுறைக்கு ஹைகோர்ட் கடந்த 2015-ல் தடைவிதித்திருந்தது.

அங்கப்பிரதட்சணம்: இதனிடையே, கடந்த மே 18-ல் நடைபெற்ற ஆராதனை விழாவில், பக்தர்கள் உண்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வேண்டும் என்று கேட்டு, கரூரை சேர்ந்த நவீன்குமார் என்பவர், ஹைகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த தனி நீதிபதி, உண்ட இலையில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அதன்படி, மே 18-ல் அங்கப்பிரதட்சண நிகழ்வும் நடைபெற்று முடிந்தது. ஆனால், தனி நீதிபதியின் அந்த உத்தரவுக்கு எதிராக, கரூர் மாவட்ட ஆட்சியர், உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நிலுவையில் உள்ளது.
அர்ச்சகர்: இதனிடையே, உண்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, திருவண்ணாமலை கோயில் அர்ச்சகர் அரங்கநாதன் என்பவரும், உயர்நீதிமன்றக் கிளையில் அப்பீல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஆராதனை விழாவில்உயர்நீதிமன்ற தடை உத்தரவால் 2015-க்கு பிறகு தற்போதுவரை உண்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யும் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனடிப்படையில் இந்த ஆண்டும் அந்த நிகழ்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், மனுதாரர் பழைய உத்தரவுகளை மறைத்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, தங்களுக்கு சாதகமான உத்தரவைப் பெற்றுள்ளார்.
கோரிக்கை மனு: இந்த உத்தரவை பலர் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, பக்தர்கள் உண்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தும், ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்த மனுவானது, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை, தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக கரூர் மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுடன் சேர்த்து பட்டியலிட உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்திருக்கிறார்கள்.
கி.வீரமணி: முன்னதாக, திராவிட கழகமும் இதுகுறித்து தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருந்தது.. மூத்த தலைவர் கி.வீரமணி வெளியிட்டிருந்த நீண்ட அறிக்கையில், "அந்நாளில் பார்ப்பன பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலைமீது நேர்த்திக் கடன் என்ற பெயரில் அங்கப்பிரதட்சணம் நடைபெற்று வந்தது. பக்தியின் பெயரால் நடைபெறும் இந்தக் காட்டுமிராண்டித்தனம் 2015 இல் தடை செய்யப்பட்டது.
இப்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி - எச்சில் இலைமீது உருளுவது மத அடிப்படை உரிமை - அதைத் தடுக்க முடியாது என்று உத்தரவுப் பிறப்பிப்பது சட்டப்படி குற்றச் செயல் அல்லவா? உச்சநீதிமன்றத்தைவிட தனக்கு அதிக அதிகாரம் உண்டு என்று நினைக்கிறாரா இந்த நீதிபதி?" என்று கி.வீரமணி கேள்வி எழுப்பியிருந்தது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications