அமைச்சரின் செல்லப் பிள்ளை.. ஆரணியை மீட்ட தரணி வேந்தன்! ஒட்டுமொத்தமாய் திமுக களமிறங்க காரணம் என்ன?
திருவண்ணாமலை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தரணி வேந்தன் அதிமுக வேட்பாளரை வீழ்த்தி பெருவெற்றி பெற்றிருக்கிறார். உள்ளாட்சித் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், ஒன்றிய செயலாளர் என தொடங்கிய அவரது பயணம் தற்போது டெல்லி நாடாளுமன்றம் செல்லும் எம்பி வரை தொடர்கிறது
நடந்து முடிந்த ஆரணி மக்களவைத் தேர்தலில் திருவண்ணாமலை திமுக வடக்கு மாவட்ட செயலாளரான தரணிவேந்தன், அதிமுக சார்பில் கஜேந்திரன், பாமக வேட்பாளர் கணேஷ் குமார், நாம் தமிழர் கட்சி பாக்கியலட்சுமி ஆகியோர் களம் கண்டனர்.

இதில் தரணிவேந்தன் சுமார் 5 லட்சம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளரான கஜேந்திரன், சுமார் 3 லட்சம் வாக்குகள் பெற்று இரண்டு லட்சத்து 8 ஆயிரத்து 66 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
கடந்த மக்களவைத் தொகுதியில் இங்கு காங்கிரஸ் சார்பில் விஷ்ணு பிரசாத் போட்டியிட்டார். அப்போது அவரை எதிர்த்துப் போட்டியிட்ட செஞ்சி ஏழுமலையை விட சுமார் 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 2009ல் அங்கு காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட நிலையில் அப்போதைய தலைவராக இருந்த கிருஷ்ணசாமி வெற்றி பெற்றிருந்தார். தொடர்ந்து 2014 இல் காங்கிரஸ் திமுக கூட்டணி உடைந்தது. அப்போது அங்கு திமுக போட்டியிட்ட நிலையில் அதிமுகவிடம் தோல்வியை சந்திக்க நேர்ந்தது.
அப்போதைய தேர்தலில் போட்டியிட்ட எம்.கிருஷ்ணசாமியின் மகனான எம்கே விஷ்ணு பிரசாத் தோல்வியை சந்தித்தார். 2019 மீண்டும் திமுக காங்கிரஸ் கூட்டணி உருவான நிலையில் அப்போது விஷ்ணு பிரசாத் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் விஷ்ணு பிரசாத் தொகுதி மக்களை சந்திக்கவில்லை திமுக நிர்வாகிகளை முறையாக சந்திப்பதில்லை உள்ளிட்ட குற்றசாட்டுகள் எழுந்த நிலையில் திமுகவே களமிறங்க வேண்டும் என நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து இந்த தகவல் அமைச்சரான எவ வேலுக்கு சென்று நிலையில் ஆரணி தொகுதியை திமுகவே கேட்டுப் பெற்று அங்கு தரணி வேந்தன் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். எ.வ.வேலுவின் தீவிர ஆதரவாளரான இவர் தற்போது வடக்கு மாவட்ட செயலாளராக இருக்கிறார். வந்தவாசி அருகே எரமனூர் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதனின் மகனான இவர் திமுகவில் 1986 ஆம் ஆண்டில் இருந்து பயணிக்கிறார்.
தரணிவேந்தன் மட்டுமல்லாது அவரது மனைவியும் அரசியல் ஆர்வம் உடையவர் தான். தரணி வேந்தனும் அவருடைய மனைவியும் உள்ளாட்சி பதவிகளை வகித்திருக்கின்றனர். மேலும் தரணி வேந்தனும் அவரது மனைவியும் ஒன்றிய குழு தலைவராகவும் இருந்திருக்கிறார்கள். தரணிவேந்தன் இரண்டு முறை கூட்டுறவு சங்க தலைவராகவும், ஆறு முறை ஒன்றிய செயலாளராகவும், 7 வருடங்களில் மாவட்ட துணை செயலாளர், மாவட்ட பொருளாளர், தற்போது திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளராக பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறார்.
மாவட்ட பொறுப்பில் நியமிக்கப்பட்டதிலிருந்து அமைச்சர் எ.வ.வேலுவின் தீவிர ஆதரவாளராகவும் அவரது மாவட்டத்தில் எதை செய்தாலும் அமைச்சர் வேலுவை கேட்டு தான் செய்வார் என்ற விசுவாசம் அவருக்கு இந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்தது என்கின்றனர் அப்பகுதி திமுகவினர். தொடர்ந்து திமுகவின் கோட்டையாக ஆரணியை நிரூபிக்க வேண்டும் என்ற முனைப்பில் அமைச்சர் எ.வ.வேலுவுடன் ஒட்டுமொத்த திமுகவே களமிறங்கிய நிலையில் தற்போது அவருக்கு இந்த பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது எனவும் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications