ஓடுங்க.. ஓடுங்க.. திருவண்ணாமலையில் கைதுக்கு பயந்து ஓடிய பாஜகவினர்! சிக்கிய ஆண்கள்-எஸ்கேப்பான பெண்கள்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு 151 கடைகள் கட்டும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பாஜகவினர் ஆர்பாட்டத்துக்கு முயன்றனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்து ஆண்களை கைது செய்த நிலையில் பெண்கள் ஓட்டம் பிடித்தனர்.
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்திப்பெற்ற இந்த கோவிலில் கார்த்திகை தீபம் பார்க்க தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள்.

மேலும் பிற நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வார்கள். இந்நிலையில் தான் கோவில் ராஜகோபுரம் 151 கடைகள் கட்ட தமிழக அரசு சார்பில் 6.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த மாதம் 20ம் தேதி புதிய கடைகள் கட்டுவதற்கான அடிக்கல்லை பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலு நாட்டினார். இதையடுத்து பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதற்கிடையே தான் கோபுரம் முன்பு புதிய கட்டடங்கள் கட்ட பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதாவது கோவில் ராஜகோபுரம் முன்பு கடைகள் கட்டுவது என்பது ராஜகோபுரத்தை மறைக்கும். மேலும் கோவிலின் அழகு மற்றும் தொண்மையை அழிக்கும் செயலாக இது இருக்கும். இதனால் இந்த கடைகள் கட்டுவதை அரசு கைவிட வேண்டும் என கூறிவந்தனர். ஆனால் பணி நிறுத்தப்படவில்லை.
இந்நிலையில் தான் கோவில் ராஜகோபுரம் முன்பு கடைகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திருவண்ணாமலையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்ய சென்றனர். இதில் பெண்களும் பங்கேற்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கலைந்து செல்லும்படி கூறினர். அதோடு ஆர்ப்பாட்டம் செய்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
இருப்பினும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து பாஜகவின் ஆண் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். இதை பார்த்த பெண்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். போலீசாரிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க அவர்கள் அங்குள்ள சாலையை கடந்து மறுபுறம் சென்று வேகவேகமாக ஓடினார்கள். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications