3 கிலோ தங்க நகை அணிந்து.. திருவண்ணாமலை கோவிலுக்கு வந்த தொழிலதிபர்.. பணியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் விஜயவாடாவைச் சேர்ந்த தொழிலதிபர் சாம்பசிவராவ் 3 கிலோ தங்கநகைகள் அணிந்து வந்து சாமி தரிசனம் செய்தார். அதுமட்டுமின்றி கோவிலில் பணியாற்றிய ஊழியர்களுக்கு அவர் பணத்தை அள்ளி கொடுத்தார்.
பொதுவாக தங்க நகைகளை அதிகமாக அணிவதில் பெண்களுக்கு தான் நாட்டம் இருக்கும் என்று கூறப்படுவது உண்டு. ஆனால் பெண்களுக்கு மட்டுமில்லை. ஆண்களுக்கும் உடல் முழுவதும் நகைகளை அணிய ஆர்வம் உண்டு என்பதை காட்டும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது.

அதாவது கழுத்து, கை, விரல் முழுவதும் நகை அணிந்து பொதுவெளியில் தொழிலதிபர்கள், பணம் படைத்தவர்கள் நடமாடுவதை இப்போது நம்மால் பார்க்க முடிகிறது. தங்கம் விற்கும் விற்பனையில் தற்போது கிலோ கணக்கில் தங்கம் வாங்கி வைப்பது இயலாத காரியம். இப்படியான சூழலில் சிலர் அதிகளவிலான தங்க நகைகளை அணிந்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
அந்த வகையில் அதிகளவில் தங்க நகைகளை அணியும் பழக்கத்தை கொண்டவர் தான் சாம்பசிவராவ். ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த இவர் தொழிலதிபராக உள்ளார். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இவர் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. துபாயில் ஹோட்டல் நடத்தி வருகிறார். சாம்பசிவராவ் தனது உடலில் அதிகப்படியான தங்க நகைகளை அணிந்து பொதுவெளியில் அவ்வப்போது உலா வருகிறார்.
அந்த வகையில் தான் இன்று சம்பசிவராவ் 3 கிலோ தங்க நகைகளை கழுத்து, கை, விரலில் அணிந்து நடமாடும் நகைக்கடையாக திருவண்ணாமலைக்கு வந்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். உடலில் மஞ்சள் நிறத்தில் அணிந்திருந்த நகைகளை பார்த்து பலரும் ஆச்சரியமடைந்தனர்.
அண்ணாமலையாரை வழிபட்ட சம்பசிவராவ் அதன்பிறகு கோவில் பணியாளர்களுக்கு பணம் வழங்கினார். கோவிலில் பணி செய்து வரும் பணியாளர்களை அழைத்த 100 ரூபாய் வழங்கி பாராட்டினார். இதுதொடர்பான வீடியோ என்பது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. சம்பசிவராவ் அடிக்கடி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இதற்கு முன்பு கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி சம்பசிவராவ், அண்ணாமலையார் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார். அதன்பிறகு இன்று மீண்டும் அவர் கோவிலுக்கு வந்து சென்றார். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்வது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications