தீக்கிரையான கார்.. திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. திருவண்ணாமலையில் அடுத்த ஷாக்
திருவண்ணாமலையில் திமுக நிர்வாகியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் அவரது கார் எரிந்து கருகியது.
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வசித்து வரும் திமுக தொண்டரணி நகர துணை அமைப்பாளர் ஒருவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் திமுக நிர்வாகியின் கார் தீப்பிடித்து எரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு ஓடும் சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் வீடியோவாக வெளியாகி உள்ளது.
திருவண்ணாமலை நகர் திருக்கோவிலூர் சாலையில் உள்ள கரையான்செட்டி தெருவில் வசித்து வருபவர் சங்கர். இவர் திருவண்ணாமலை திமுக தொண்டரணி நகர துணை அமைப்பாளராக பொறுப்பில் உள்ளார்.
சங்கர், ரியல் எஸ்டேட், பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் தான் நேற்று இரவு சங்கர் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

பெட்ரோல் குண்டு வீச்சு
இந்நிலையில் தான் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணியளவில் சங்கர் வீட்டு அருகே மர்மநபர்கள் வந்துள்ளனர். இவர்கள் திடெீரென்று அவரது வீட்டுக்குள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இவர்கள் வீசிய பெட்ரோல் குண்டு சங்கரின் கார் மீது விழுந்துள்ளது. இதனால் அவரது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

போலீஸ் விசாரணை
கார் எரியும் சத்தம் கேட்டு சங்கர் வீட்டில் தூக்கத்தில் இருந்து கண்விழித்தார். வீட்டை விட்டு வெளியே வந்தபோது கார் தீப்பிடித்து எரிவதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். மேலும் சங்கர் மற்றும் அக்கம்பக்கத்தினர் சேர்ந்து தண்ணீரை ஊற்றி காரில் பிடித்த தீயை போராடி அணைத்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

சிசிடிவியில் பதிவு
மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சங்கர் வீட்டில் 2 நபர்கள் பெட்ரோல் குண்டு வீசுவது தொடர்பான காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில் பதிவாகி உள்ள நபர்களின் அடையாளங்களை கொண்டு மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். சங்கர் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் தொழில் செய்து வருவதால் முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதுபற்றியும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

ஏடிஎம் கொள்ளையை தொடர்ந்து
முன்னதாக கடந்த 12ம் தேதி திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெரு எஸ்பிஐ ஏடிஎம் மையம், தேனிமலை பகுதி எஸ்பிஐ ஏடிஎம், போளூர் பஸ் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ ஏடிஎம், கலசப்பாக்கம் அண்ணாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள இண்டிகா ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து பல லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் இன்னும் கொள்ளை கும்பல் சிக்காத நிலையில் தான் தற்போது திருவண்ணாமலையில் உள்ள திமுக பிரமுகரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications