திருவண்ணாமலை தேர் திருவிழாவின்போது அதிர்ச்சி.. மின்சாரம் தாக்கி 30 பேர் காயம்.. அலறி ஓடிய பக்தர்கள்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தின்போது, மின்சாரம் தாக்கி சுமார் 30 பக்தர்கள் காயமடைந்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி காலை மற்றும் இரவு நேரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய சுவாமிகள் வீதி உலாவந்து பக்தர்களுக்கு காட்சி தந்தனர். பத்து நாள் உற்சவத்தின் முக்கிய நிகழ்வான மகா தேரோட்டம் இன்று (நவம்பர் 23) நடைபெற்றது. திருவண்ணாமலை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.

காலை விநாயகர் தேரோட்டமும், மதியம் வள்ளி தெய்வானை சமேத முருகரின் திருத்தேரோட்டமும் நடைபெற்றது. மாலை 5.15 மணிக்கு பெரிய தேர் என அழைக்கப்படும் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் தேரோட்டம் நடைபெற்றது.காலை 7.41 மணியளவில் விநாயகர் திருத்தேர் புறப்பாடு தொடங்கியது. பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மாட வீதியில் வலம் வந்து, காலை 11.39 மணியளவில் நிலையை வந்தடைந்தது.
பின்னர், வள்ளி தெய்வானை சமேத முருகரின் திருத்தேர், 11.55 மணியளவில் புறப்பட்டது. பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இந்தத் திருத்தேர் 4.30 மணியளவில் நிலையை வந்தடைந்தது. மாலை 5.15 மணியளவில் அண்ணாமலை திருத்தேர் புறப்பட்டு நகர்ந்தபோது, நகர குற்றப்பிரிவு காவல் நிலையம் எதிரே உள்ள பழக்கடை, துணிக் கடைகளில் இருந்த பக்தர்கள் சிலர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் அலறியடித்து, மாடியில் இருந்து சிலர் குதித்தனர்.
முதல் மாடியில் இருந்த ஒருவர், மின்சாரம் பாய்ந்த நிலையில், தனது குழந்தையை கீழே இருந்தவரிடம் தூக்கி வீசினார். பலர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பழக்கடை மற்றும் துணிக்கடைகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட சுமார் 30 பக்தர்களில் 8 பேர் மட்டும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த அசம்பாவித சம்பவத்தால் 20 நிமிடம் தேரோட்டம் தடைப்பட்டது. இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
பின்னர், பக்தர்களின் முழக்கம் சூழ, திருத்தேர் புறப்பட்டது. மாட வீதியில் வலம் வந்த பெரிய தேரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வணங்கினர். பெரிய தேர், நிலையை வந்தடைய நீண்ட நேரமானது. தேரோட்டத்தையொட்டி பொருத்தப்பட்டிருந்த மின்சார அலங்கார விளக்கில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்ததாக தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications