முப்பெரும் துறைகளின் தோல்வி.. திருவண்ணாமலை மின்கசிவு விபத்தால் திமுக அரசை சரமாரியாக விளாசிய எடப்பாடி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை தேரோட்டத்தின்போது மின் கசிவினால் ஏற்பட்ட விபத்து, திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையை குறிப்பாக, அறநிலையத் துறை, மின்சாரத் துறை மற்றும் காவல் நுண்ணறிவுப் பிரிவு ஆகியவற்றின் தோல்வியையே காட்டுகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டத்தின்போது, கடைகள் இருந்த பகுதியில் திடீர் மின்கசிவு ஏற்பட்டது. இதில், மின்சாரம் பாய்ந்து 30-க்கும் மேற்பட்டோர் கீழே விழுந்து காயமடைந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்தப் பகுதியில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில், அதிக காயம் இருந்த 8 பேர் மட்டும் 2 ஆம்புலன்ஸ் வாகனங்களில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் தேரோட்டத்தின்போது பெரும் பதட்டமான சூழல் நிலவியது. இந்தச் சம்பவம், திமுக அரசின் நிர்வாக தோல்விக்கு சான்று என விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் "இன்று மாலை (23.11.2023), பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருத்தேர் பவனியின் போது ஏற்பட்ட மின் கசிவால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாகவும், 8 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். திருவண்ணாமலை வரலாற்றில் திருத்தேரோட்டத்தின் போது இதுவரை மின் கசிவு ஏற்பட்டு பக்தர்கள் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வந்ததில்லை.
பொதுவாக, இதுபோன்ற திருத்தேர் பவனியின் போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, போதிய முன்னெச்சரிக்கையுடன் தேரோட்டம் நடைபெறும். ஆனால், இன்று நடந்த மின் கசிவினால் ஏற்பட்ட இந்த விபத்து, திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையை குறிப்பாக, அறநிலையத் துறை, மின்சாரத் துறை மற்றும் காவல் நுண்ணறிவுப் பிரிவு ஆகியவற்றின் தோல்வியையே காட்டுகிறது.
ஏற்கெனவே, திமுக அரசின் 30 மாத கால ஆட்சியில், தேரோட்டம் மற்றும் திருக்கோயில் விழாக்களின்போது விபத்துகள் ஏற்பட்ட சமயங்களில் நான், இனிவரும் காலங்களில் தேரோட்டங்களின் போதும், திருக்கோயில் விழாக்களின் போதும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறநிலையத் துறையை வலியுறுத்தி இருந்தேன்.
ஆனால், இன்று நடந்த நிகழ்வைப் பார்க்கும்போது, திருவண்ணாமலை திருத்தேரோட்டப் பாதையில் திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இனியாவது, திமுக அரசு விழித்துக்கொண்டு இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க வலியுறுத்துகிறேன். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உரிய சிகிச்சைகளை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications