பேக்டரி எங்கே கட்டுவது?.. போராட தூண்டுவதா? விவசாயிகள் மீது குண்டர் சட்டம்.. எ.வ. வேலு விளக்கம்
திருவண்ணாமலை: விவசாய நிலத்தை அபகரிப்பதோ? விவசாயிகளை வஞ்சிப்பதோ அரசின் நோக்கமல்ல என்று அமைச்சர் எ.வ. வேலு கூறியுள்ளார். பேக்டரி கட்டுவதற்கு நிலம் தேவைப்படுகிறது. அதற்காக கையகப்படுதினால் போராட தூண்டுகின்றனர் என்று எ.வ. வேலு கூறியுள்ளார். விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது ஏன் என்று எ.வ. வேலு விளக்கம் அளித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் அலகு 3 விரிவாக்க பணிக்கு 3000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தினை கடந்த ஆட்சியாளர்கள் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டத்தினை கைவிட வலியுறுத்தி மேல்மா, குரும்பூர், நர்மா பள்ளம், தேத்துறை, காட்டுக்குடிசை நெடுங்கல் உள்ளிட்ட 9 ஊர் கிராம மக்கள் கடந்த 125 நாட்களாக தனியார் நிலம் ஒன்றில் கொட்டகை அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு போலீசார் கொட்டகையை அகற்றி போராட்டகாரர்களுக்கு ஆதரவாக இருந்த 20 நபர்களை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருபது நபர்களையும் வேலூர், மதுரை, பாளையங்கோட்டை உள்ளிட்ட சிறைச்சாலையில் அடைத்தனர்.
தற்போது இருபது நபர்களில் போராட்டத்திற்கு தூண்டுதலாக இருந்த அருள், பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ், உள்ளிட்ட ஏழு நபர்கள் மீது மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது ஏன்? என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, குண்டர் சட்டத்தில் கைதான 7 பேரும் எட்டு வழிச்சாலை போராட்டத்தையும் முன் நின்று நடத்தியவர்கள் என்றும், அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு எதிராக மக்களை தூண்டி விட்டு, எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்றும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதனிடையே திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, பேக்டரி கட்டுவதற்கு நிலம் தேவைப்படும் போது எங்கே போய் எடுப்பது. விவசாய நிலங்களை கையகப்படுத்தினால்தான் பேக்டரி கட்ட முடியும் என்று கூறினார். பேக்டரி கட்டினால்தான் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் எ.வ. வேலு தெரிவித்தார்.
அரசாங்கம் செய்யும் நல்ல செயல்களை தடுக்கிறார்கள். திருவண்ணாமலையில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். அதற்காகவே சிலர் விவசாயிகளை போராட தூண்டி விடுகிறார்கள் என்றும் எ.வ. வேலு கூறினார். கிருஷ்ணகிரியில் இருந்து வந்து இங்கு போராட தூண்டுபவர்கள் மீதுதான் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது என்றும் எ.வ. தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications