திடீரென மாறிய முகம்! கிரிவலத்தில் ஆளுநர் ஆர்என் ரவியின் கண்ணில் பட்ட ‛அந்த’ மேட்டர்! பெரும் வருத்தம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள பிரசித்திப்பெற்ற அண்ணாமலையாளர் கோவிலில் ஆளுநர் ஆர்என் ரவி கிரிவலம் சென்றார். இந்நிலையில் அங்கு பார்த்த சில காட்சிகளால் அவர் மிகுந்த வருத்தத்துக்கு உள்ளான தகவல் வெளியாகி உள்ளது.
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவில் உள்ளது. சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் நெருப்பு தலமாக இது போற்றப்படுகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கார்த்திகை தீபதிருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தை காண தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து செல்வார்கள். இதுதவிர பிற நாட்களில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து கிரிவலம் சென்று தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக திருவண்ணாமலை சென்றார். இதையடுத்து அவர் திருவண்ணாமலை கோவிலில் தனது குடும்பத்துடன் சாமிதரிசனம் செய்தார். அவர் கிரிவலப்பாதையில் கிரிவலம் சென்றார். மேலும் கிரிவலப்பாதையில் சாதுக்கள் மற்றும் ஆன்மிக குருக்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.
இந்த வேளையில் கிரிவலப்பாதையில் அசைவ உணவுகள் வழங்கும் ஓட்டல்கள் இருந்தன. இதனை பார்த்து ஆளுநர் ஆர்என் ரவி வருத்தமடைந்துள்ளார். அண்ணாமலை கோவில் கிரிவலப்பாதையில் அசைவ உணவுகள் என்பது பக்தர்களுக்கு முகம் சுளிக்க செய்யலாம் என அவர் கவலையடைந்தார்.
இதுபற்றி அவர் வெளிப்படையாகவே பேசியுள்ளார். அதாவது, ‛‛கோவில் கிரிவலப்பாதையில் வலம் வந்தபோது அசைவ உணவகங்கள் இருந்தன. அதனை பார்த்த வருத்தமடைந்தேன். உணவு பழக்கம் வழக்கம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்றாலும் ,பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். கிரிவலப்பாதையில் அசைவ உணவகங்கள் இருக்கும் வேதனையை பக்தர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டனர்.
கிரிவலப் பாதையில் அசைவ உணவகம் இருப்பதற்கு அனுமதி கிடையாது. இதை அகற்ற முடிந்தவரை நான் முயற்சி செய்து கோரிக்கையை நிறைவேற்றி தருவேன். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் அமைதியான பூமி. கிரிவலம் வருவது மன நிம்மதியை தரக்கூடியது. உலக அளவில் இந்தியா ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை உடைய நாடு. கிரிவலப் பாதையில் தங்கியுள்ள சாதுக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என கூறினார்.












Click it and Unblock the Notifications