திருமணம் முடிஞ்சி 6 நாள்தான் ஆச்சு.. மனைவி மரணம், கணவன் தற்கொலை! அதிர்ந்துபோன உறவினர்கள்! என்னாச்சு?
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, விருந்துக்காக தாய் வீட்டுக்கு வந்த புதுப்பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததால், துக்கம் தாங்க முடியாமல் புதுமாப்பிள்ளையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த செவரப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னத்துரை - மஞ்சுளா தம்பதியின் மகள் சந்தியா. இவருக்கும், விழுப்புரம் மாவட்டம், அவலூர்பேட்டையை அடுத்த குந்தலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி - கன்னியம்மாள் மகன் முருகன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கடந்த 9-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

தாய் வீட்டில் விருந்து
திருமணம் ஆன புதுமண தம்பதியர், திருப்பதிக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்துள்ளனர். பின்னர், புதுப்பெண் சந்தியா, செவரப்பூண்டி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு, கடந்த 12-ம் தேதி, தனது கணவருடன் விருந்துக்காக வந்துள்ளார். இந்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மாப்பிள்ளை முருகனின் அம்மா மற்றும் அப்பாவும் உடன் வந்திருந்தனர்.

புதுப்பெண் மரணம்
இந்நிலையில், புதுப்பெண் சந்தியா, வீட்டில் உடைமாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த வீட்டில் இருந்தவர்கள், சந்தியாவை உடனடியாக மீட்டு, திருவண்ணாமலையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சந்தியா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தால், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சோகத்தில் உறைந்தனர்.

காவல் நிலையத்தில் புகார்
திருமணம் ஆன 6-ம் நாளிலேயே தனது மகள் திடீரென உயிரிழந்ததால் சொல்லொண்ணா துயரத்தில் இருந்த, சந்தியாவின் தந்தை சின்னதுரை, கீழ்பென்னாத்தூர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். பெண்ணின் தந்தை அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுமாப்பிள்ளை தற்கொலை
இதனிடையே, மனைவியின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்த சந்தியாவின் கணவர் முருகன், தனது வீட்டுக்குச் சென்று விட்டு வருவதாகக் கூறி, விழுப்புரம் மாவட்டம், குந்தலம்பட்டி கிராமத்திற்கு சென்றுள்ளார். பின்னர், வீட்டு அருகே உள்ள வயல்வெளி பம்பு செட்டில் தூக்கிட்டு, முருகன் தற்கொலை கொண்டதாக கூறப்படுகிறது.
திருமணம் ஆன 6 நாட்களிலேயே, மனைவி இறந்த துக்கத்தை தாங்க முடியாமல், கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமின்றி, அப்பகுதி பொதுமக்களிடையேயும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications